அன்னை மரியா, மகிழ்ச்சியின் மறைப்பணியாளர்

உங்கள் பயணத்தின் ஒவ்வொரு படியிலும் உங்கள் உலகத்தை வண்ணமயமாக்குங்கள்; வாழ்க்கையின் பாதைகளை நற்செய்தியுடன் ஒளிமயமாக்குங்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ்  சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆகஸ்ட் 5, இச்சனிகிழமையன்று, போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் நிகழ்ந்த இளையோருக்கானத் திருவிழிப்பு செபவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்புள்ள சகோதரர் சகோதரிகளே,  'மரியா புறப்பட்டு விரைந்து சென்றார்' (லுக் 1:39) என்பதுதான் இந்த உலக இளையோர் தினத்தின் மையக்கருத்தாக அமைத்துள்ளது. அவர் ஏன் புறப்பட்டு தன் உறவினரிடம் விரைந்து சென்றார்? என்று நாம் கேட்கலாம். அவர் எலிசபெத்தின்மீது கொண்டிருந்த அன்புதான் இதற்குக் காரணம்.

எல்லாவற்றையும்விட உயர்வாகப் போற்றப்படுகின்ற மகிழ்ச்சியைக் கொடுப்பதற்காகத்தான் அவர் எலிசபெத்தின் வீட்டிற்கு விரைந்து சென்றார்.  அன்னை மரியா மகிழ்ச்சியின் மறைப்பணியாளர். அதனால்தான் அவர் விரைந்து சென்றார். இங்கே 'விரைந்து சென்றார்' என்பது நலமானதாக அமைகின்றது. மரியா, தான் அனுபவித்த நன்மையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தூண்டப்பட்டதன் விளைவாக இச்சந்திப்பு நிகழ்கின்றது.

‘மகிழ்வடைந்திடு’, ‘ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார்’, ‘அஞ்சவேண்டாம்’ (லூக் 1:28.30) என்று வானதூதர் வழியாக இறைவன் தனக்களித்த அதே வார்த்தைகளைத்தான் அன்னை மரியா எலிபெத்துக்கும் வழங்குகின்றார். அஞ்சவேண்டாம், நான் உன்னோடு இருக்கின்றேன் என்று ஒருவர் நம்மைப் பார்த்துக் கூறும்போது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்!  இதைத்தான் அன்னை மரியாவும் செய்தார். கடவுளுடைய நெருக்கத்தின் அழகைப் பகிர்ந்து கொள்வதற்காக, அவர் தன்னை மற்றவர்களுடன் நெருக்கமாக்கிக் கொள்கின்றார். ஆகவே, கடவுளின் நெருக்கத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதற்காகத்தான் நாமும் இங்கே வந்திருக்கின்றோம்.

நமது மகிழ்ச்சியின் வேர்கள்

மகிழ்வு தரும் கடவுளுடைய அன்பின் ஒளிக்கதிர்களை நம் வாழ்வில் உதிக்கச் செய்தவர்களை இப்போது நினைத்துப் பார்ப்போம். யார் இந்த மகிழ்ச்சியின் வேர்கள்? நமது  பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி, அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், வேதியர்கள், மறைக்கல்வி ஆசிரியர்கள், குழுத் தலைவர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர்தான் நமது மகிழ்ச்சியின் வேர்கள் என்பதை உணர்வோம்.

ஒரு மரத்தின் ஆணிவேர்தான், சூறைக்காற்று, புயல், பெருமழை, பெருவெள்ளம் எனத் தொடரும் அனைத்து சவால்களின் மத்தியிலும் அம்மரத்தை மண்ணில் நிலைத்துநிற்கச் செய்கிறது. அவ்வாறே, நாம் கொண்டுள்ள மகிழ்ச்சி என்னும் வேர்கள்தான் நமது வாழ்க்கைக்குத் தேவையான உறுதியையும் நிலைத்தன்மையையும் தருகின்றன. அவ்வேர்கள்தான் நம் ஆன்மாவுக்கு நீர் ஊற்றும் இரகசிய நீரூற்றுகள்.

இளம் நண்பர்களே, நமக்கு வாழ்வையும், நம்பிக்கையையும், அன்பையும் கொடுத்த அந்த வேர்களுக்கு நாம் எப்போதும் தகுதியானவர்களாக இருப்போம்! அதேவேளை, மற்றவர்களுக்கு மகிழ்ச்சியின் வேர்களாக இருக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் நம் நினைவில் கொள்வோம்.

பயணத்தின் வழி மகிழ்ச்சி

நமது வாழ்வின் ஆணிவேராக அமைந்துள்ள இந்த மகிழ்ச்சி என்பது நாம் மேற்கொள்ளும் பயணத்தின் வழியாகத்தான் கிடைக்கும் என்பதையும் மரியா நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றார். எனவே, நமது வாழ்வில் மகிழ்ச்சியை அதிகரிக்க வேண்டுமெனில் பயணிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நம்மைப் பணிக்கிறார் அன்னை மரியா.

நிச்சயமாக, நமது பயணத்திற்கு ஒரு நிலையான மற்றும் வழக்கமான வேகம் தேவைப்படுகிறது. அதேவேளை, இன்று அனைவரும் நொடிப்பொழுதே ஏற்படும் உணர்வுகள், (fleeting emotions), கணநேரமேயுள்ள உணர்வுகள் (momentary feelings), திடீர் உள்ளுணர்வுகளால் (sudden instincts) ஏற்படும் உணர்வுகள் ஆகியவற்றால் உந்தப்பட்டு வாழ்கின்றனர். ஆனால், இந்த மகிழ்ச்சி என்பது இப்படிப்பட்ட வழியில் பிறப்பதல்ல, மாறாக, படிப்படியாகச் சென்றால்தான் அதிக தூரம் பயணிக்க முடியும் என்பதையும் மரியாவின் வாழ்விலிருந்து படிப்பித்துக்கொள்வோம்.

மேலும் விளையாட்டு வீரர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் பெரிய இலக்குகளை உடனடியாக அடைய முடியாது என்பதை நமக்குக் காட்டுகிறார்கள். ஒரு கோல் அடிக்க எவ்வளவு பயிற்சி தேவை, நம் இதயத்தைத் தொடும் பாடலை எழுதுவதற்கு எவ்வளவு முயற்சி தேவை, ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்த, ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு எவ்வளவு காலங்கள் தேவை என்பதையெல்லாம் இவர்களின் வாழ்விலிருந்து நாம் கற்றறிந்திருக்கின்றோம்.

இணைந்து செயலாற்றல்

வெற்றிக்கான இரகசியம் என்பது பயணத்தில் உள்ளது, நாள்தோறும் நாம்  பின்பற்றும் செயல்பாட்டில், படிப்படியாக, நமக்கு முன் சென்றவர்களின் அடிச்சுவடுகளில் இணைந்து செயலாற்றுவதில் அடங்கியுள்ளது. ஆகவே, இணைந்து செயல்படுவது என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. மிகவும் முக்கியமான காரியத்தை செய்ய முற்படுகையில், 'இதை நீங்களே செய்துவிடுங்கள்' என்ற அணுகுமுறை நிச்சயம் பயன்தராது. எனவே, தயவுகூர்ந்து, மற்றவர்களிடமிருந்து விலகிச் செல்லாமல், அவர்களைத் தேடி, கடவுளின் பிரசன்னத்தை ஒன்றாக அனுபவிக்குமாறும், ஒரு குறிக்கோளுடன் ஒரு குழுவில் தீவிரமாகப் பங்கேற்குமாறும் நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.

எதிர்நீச்சல் வேண்டும்

"என்னைச் சுற்றியுள்ள அனைவரும் அலைபேசியில், தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள், சமூக ஊடகங்கள் மற்றும் காணொளி விளையாட்டுகளில் சிக்கித் தவிக்கின்றனர் என்று நீங்கள் என்னிடம் கூறலாம். இருப்பினும், உங்களைப் பொறுத்தவரை, நீரோட்டத்திற்கு எதிராக நீந்த அச்சம்கொள்ள வேண்டாம். உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுங்கள்,  தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, நற்செய்தி வாசிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுங்கள், அலைபேசிகளைத் ஒதுக்கி வைத்துவிட்டு மற்றவர்களை சந்திக்கச் செல்லுங்கள்!

இதற்கு நீங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதை என்னால் கேட்க முடிகிறது என்று நினைக்கின்றேன். காரணம் இது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. நீரோட்டத்திற்கு எதிராக நீந்துவது என்பது மிகவும் கடிமான ஒன்றுதான். ஆனால் அன்னை மரியாவின் வாழ்க்கையை உற்றுநோக்கினால் அதற்கான வழியை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். தனது மகன் இயேசுவுக்கு அடுத்தபடியாக அவர் எல்லா இடங்களுக்கும் பயணித்தார்.

நாசரேத்திலிருந்து எலிசபெத் வாழ்ந்த மலைநாடு வரை, பின்னர் பெத்லகேம் மற்றும் எருசலேம் வரை, கல்வாரி வரை மற்றும் இறுதியாக மேல் அறை வரை (இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு) என மரியாவின் பயணம் அனைத்தும் அவரது நடைமுறை வாழ்வில் மேல்நோக்கியே அமைந்திருந்தது. அன்னை மரியா மேல்நோக்கியே பயணிக்கிறார். ஏனென்றால் மேல்நோக்கி நடப்பதன் வழியாக மட்டுமே நாம் உயரத்தை அடைகிறோம். நிச்சயமாக, மேல்நோக்கிச் செல்வது மிகவும் துயரமானது, அதற்கு ஒரு நிலையான வேகம் தேவை. ஆனால் பல சிரமங்களுக்கு மத்தியில் அந்த மலையின் உயரத்தை அடைந்ததும் நாம் அடையும் மகிழ்விற்கு அளவிருக்காது. ஒட்டுமொத்த பகுதிளையும் அம்மலை உச்சியிலிருந்து நாம் காணும்போது ஏற்படும் மகிழ்ச்சி அது

பலவீனங்களை அறிந்தவர் இயேசு.

நாம் இயேசுவுக்குப் பின்னால் பயணிக்கும் பல தருணங்களில் எதிர்நீச்சல் போடமுடியாமால் கீழ்நோக்கிப் பயணிக்கும் நிலை ஏற்படலாம். ஆனால் அத்தகைய வேளைகளில் இயேசு நம்முடன் நடக்கின்றார். இயேசு உங்கள் முதுகில் மட்டும் தட்டிக் கொடுத்துவிட்டுப் புறப்படுபவர் அல்ல, ஆனால் வழியில் உங்களுடன் இறுதிவரை வரும் உண்மையான நண்பர். அவர் உங்கள் அச்சத்தைப் போக்க உதவுகிறார். மேலும் உங்களை மகிழ்ச்சி தரும் மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறார். அவர் உங்களை முற்றிலும் அறிவார், உங்கள் தகுதியையும், உங்களால் என்ன செய்ய முடியும் என்பதையும் அவர் நன்கு அறிவார். நீங்கள் தவற்றில் வீழும்போதெல்லம் உங்களருகில் இருக்கும் அவர் புன்னகையுடன் உங்களைத் தூக்கிவிடுகிறார்.

நாம் இழைக்கும் எல்லாத் தவறுகளையும் அவர் குறித்து வைத்துக்கொள்வதில்லை. அவருடைய அன்பு நாம் என்ன செய்கிறோம் அல்லது எதைச் செய்யத் தவறுகிறோம் என்பதைப் பொறுத்தது அல்ல. தவறு செய்தவர் தண்டிக்கப்படக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கின்றார். கடவுள் உண்மையுள்ளவர், அவர் நம்மை நம்புகிறார். எனவே, நம் முழு நம்பிக்கையையும் அவர் மீது வைப்போம்!

அன்பான சகோதரர் சகோதரிகளே! பயணம் குறித்து இன்னுமொரு கருத்தை நான் உங்களுக்குக்  கூற விரும்புகின்றேன். இங்கே இந்த நாட்களில் நாம் வியக்கத்தக்க அனுபவங்களைப் பெற்றோம். நாம் இல்லம் திரும்பியவுடன் நமது பயணத்தை எப்படித் தொடர்வது என்பது குறித்தும் இப்போது சிந்திப்போம். அதற்கும் அன்னை மரியா நமக்கு உதவுகிறார். எனவே 'புறப்பட, விரைந்து செல்ல (to set out and to go) என்ற இரண்டு காரியங்களை உங்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

01. புறப்பட (to set out)

நாம் இந்த மண்ணுலகிற்காக அல்ல, விண்ணுலகிற்காக உருவாக்கப்பட்டதால், படுக்கையிலிருந்து எழுந்து சொந்தக் காலில் நின்று கொண்டு புறப்பட வேண்டும். நம் பிரச்சனைகளை விட்டுவிட்டு, நம் பார்வையை மேல்நோக்கி உயர்த்தி புறப்பட வேண்டும். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் நாம் ஒவ்வொருவரும் ஒரு கொடை என்ற உண்மையை ஏற்றுக்கொள்வது. இது சுயநலம் அல்லது தற்பெருமை அல்ல, ஆனால், இதுதான் எதார்த்தம். இது ஒவ்வொரு நாளும் நமது பயணத்தின் தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாள் காலையிலும் படுக்கையிலிருந்து நீங்கள் எழுந்தவுடன் செய்ய வேண்டிய முதல் காரியம் நான் ஒரு கொடை என்பதை ஏற்றுக்கொள்வதுதான்.

இது எப்படி சாத்தியம் என்றால், கடவுளுக்கு நன்றி கூறுவதன் வழியாக இதனை ஏற்றுக்கொள்வது. ஆண்டவரே இந்த வாழ்க்கைக்காக உமக்கு நன்றி. இந்த வாழ்க்கையை அன்புசெய்ய உதவுங்கள், ஆண்டவரே நீரே என் உயிர் என்று ஒரு கணம் சொல்லுங்கள்.

02. விரைந்திட (to go)

இது இரண்டாவது படிநிலையாகும். நீங்கள் ஒரு கொடை என்பதை ஏற்றுக்கொள்வது முதல் படி என்றால்,  உங்களை மற்றவர்களுக்குக்  கொடையாகக் கொடுப்பது இரண்டாவது படி என்பதை உணர்ந்திடுங்கள். நாம் வசதியாக வாழ்வதற்காக இவ்வுலகிற்கு வரவில்லை. மாறாக, நமது உதவி யாருக்குக்குத் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு விரைந்து சென்று உதவிட நம்மை நாமே வசதியற்ற நிலைக்கு ஆட்படுத்திக்கொள்ள வேண்டும்.  

பிறருக்காகத் தங்கள் வாழ்க்கையைச் செலவிடுபவர்கள் தங்கள் வாழ்க்கையை சம்பாதிக்கிறார்கள், ஏனென்றால் நாம் அந்த வாழ்க்கையைக் கொடுக்கும்போதுதான் அது நமக்குச் சொந்தமாகிறது. அன்னை மரியா, கடவுளிடமிருந்து தான் பெற்ற வாழ்க்கை என்னும் கொடையை எலிசபெத்திடம் கொடுக்கும் கொடையாக தன்னை உடனடியாக மாற்றிக்கொண்டார்.

மேலும் 'ஏன்?' (Why) என்ற கேள்வியை விட்டுவிடுவோம் அதற்குப் பதிலாக 'யார்' (Who) என்ற கேள்விக்கு முன்னுரிமைக் கொடுப்போம். நான் உதவ முடியும் என்று வெளியே யார் இருக்கிறார்? எனது நேரமும் ஆற்றலும் தேவைப்படும் நபர் யார் இருக்கிறார் என்று உற்றுநோக்குவோம்.

ஆக்கப்பூர்வமாகவும் தாராளமாகவும் இருங்கள்! செல்வம் மற்றும் இலாபம் என்று வெறித்தனமாக அலையும் இன்றைய உலகில் உங்கள் வாழ்க்கையை இரக்கத்தின் ஒத்திசையாக (symphony) மாற்றுங்கள்! அப்போது நீங்கள் உண்மையான புரட்சியாளர்களாக இருப்பீர்கள். அச்சமின்றி வெளியே சென்று தாராளமாக கொடுங்கள்! எனவே புறப்படுங்கள்! கடவுளிடம் உங்கள் இதயத்தைத் திறந்து, அவருக்கு நன்றி செலுத்துங்கள், நீங்கள் இருக்கும் அழகைத் தழுவுங்கள், உங்கள் வாழ்க்கையை அன்பு செய்யவும், ஒவ்வொரு நாளும் நீங்கள் அன்புகூரப்படுவதைப் புதிதாகக் கண்டறியவும் முயலுங்கள்.

வெளியே செல்லுங்கள், மற்றவர்களின் அருகில் நடந்து செல்லுங்கள், தனியாக இருப்பவர்களைத் தேடுங்கள், உங்கள் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உங்கள் உலகத்தை வண்ணமயமாக்குங்கள் மற்றும் வாழ்க்கையின் பாதைகளை நற்செய்தியுடன் ஒளிமயமாக்குங்கள். எழுந்து செல்லுங்கள். உங்களை அழைக்கும் இயேசுவின் குரலுக்குச் செவிகொடுங்கள்.

நற்கருணை ஆராதனை

இயேசு தான் உதவி செய்த மற்றும் குணப்படுத்திய அத்தனை பேரிடமும், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” (காண்க. Lk 17:19) என்று கூறிய அதே வார்த்தைகளைத்தான் நம்மிடமும் இந்நேரத்தில் கூறுகின்றார். அந்த வார்த்தைகளை நாம் தொடர்ந்து கேட்க வேண்டும். நற்கருணை ஆராதனையில் நாம் இப்போது அதைத்தான் செய்கிறோம். நாம் இயேசுவைப் பார்க்கிறோம், அவர் நம்மைப் பார்க்கிறார். இப்போது, ​​மௌனமாக, நம்மை ஆறுதல்படுத்தவும், உற்சாகப்படுத்தவும், குணப்படுத்தவும், நம்மை பணிக்கு அனுப்பவும் உதவும் அவருடைய அன்பான மற்றும் மென்மையான வார்த்தைகளுடன் அவரை நம் இதயங்களில் பேசுவதற்கு அனுமதிப்போம். நற்கருணை ஆராதனை என்பது நம் ஆண்டவருடனான ஆழ்ந்த தனிப்பட்ட சந்திப்பாகும். ஆனால் இந்தச் சந்திப்புதான் நாம் எழுந்து செல்வதற்கான வலிமையின் ஆதாரமாகவும் இருக்கிறது.

நற்கருணை ஆண்டவரின் முன்னிலையில், நாம் நம் வழியைத் தேடுகின்றோம், ஏனென்றால் இயேசுவே வாழ்வின் வழியாக இருக்கின்றார் (காண்க. யோவா 14:6). இன்று மாலை இந்த நற்கருணை ஆராதனையின்போது இயேசுவுடனான நமது சந்திப்பைப் புதுப்பித்துக்கொள்வோம். ஆண்டவராகிய இயேசுவே, நான் உமக்கு நன்றி கூறுகின்றேன், உம்மைப் பின்பற்றுகிறேன், நான் உம்மை அன்பு கூறுகின்றேன், நான் எப்போதும் உங்கள் அருகில் நடக்க விரும்புகிறேன் என இயேசுவின் பக்கம் திரும்பி அவரைப் பார்த்துக் கூறுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2023, 14:44