திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

Slovenia, Georgia மற்றும் உக்ரைன் மக்களுக்காக திருத்தந்தை செபம்

புனித எடித் ஸ்டெயினின் பாதுகாவலில், அன்பான உக்ரேனிய மக்களை நாம் ஒப்படைப்போம். அவர்கள் விரைவில் மீண்டும் அமைதி பெறுவார்களாக! : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஸ்லோவேனியா மற்றும் ஜார்ஜியா-வில் இயற்கைப்பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தான் இறைவேண்டல் செய்வதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கும் இந்த பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 9, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய புதன் பொது மறைக்கல்வி உரைக்குப் பின்பு இவ்வாறு கூறியதுடன், இந்த இயற்கைப்பேரிடரில் பாதிக்கப்பட்டோர் மற்றும் இறந்தோர் அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்யும்படியும் அவர்களிடம் விண்ணப்பித்துள்ளார்.

ஜார்ஜியாவில், கடந்த வியாழனன்று, திபிலிசிக்கு வடமேற்கே ஏறத்தாழ 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷோவி மலைப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரும் நிலச்சரிவில், குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர். அவ்வாறே, வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட ஸ்லோவேனியாவில் 6 பேர் இறந்ததுடன், நூற்றுக்கணக்கானவர்கள்  தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

உக்ரைனுக்காக புனித எடித் ஸ்டெயினிடம் இறைவேண்டல்

இதன் பிறகு, தொடர் போரால் பாதிக்கப்பட்டு வரும் உக்ரைன் நாட்டிற்காகவும், அம்மக்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்காகவும் இறைவேண்டல் செய்ய திருப்பயணிகளைப் பணித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 9, புதன்கிழமை இன்று, ஐரோப்பாவின் பாதுகாவலரும் மறைசாட்சியுமான திருச்சிலுவையின் புனித தெரசா பெனிடிக்டாவின் திருவிழாவை நினைவுகூர்ந்த திருத்தந்தை, மக்கள் மத்தியில் நிகழ்ந்துவரும் அனைத்து வகையான வன்முறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக, அவரது சாட்சிய வாழ்வு உரையாடல் மற்றும் உடன்பிறந்த உறவுக்கான அர்ப்பணிப்பைத் தூண்டட்டும் என்றும் இறைவேண்டல் செய்தார்.

மேலும், இப்புனிதையின் பாதுகாவலில், துயருறும் உக்ரைன் மக்கள் அனைவரையும் ஒப்படுகொடுத்தும் இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2023, 14:57