பூமி மற்றும் ஏழைகளின் துயரம் குறித்து விழிப்பாயிருங்கள்!

எதிர்மறையான அணுகுமுறைகளுக்குப் பதிலாக, ஓர் ஒருங்கிணைந்த மற்றும், முழுவதையும் தழுவும் திறன் கொண்ட பார்வை நமக்குத் தேவை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆகஸ்ட் 3, இவ்வியாழனன்று, போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் உள்ள கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை.

அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே, தேடுதல் மற்றும் துணிவு ஆகிய இவை இரண்டும்தான் திருப்பயணிகளின் பயணத்தை விவரிக்கும் இரண்டு வார்த்தைகளாக அமைகின்றன. அப்படியானால், நீங்கள் தொடர்ந்து அறிவுத்தேடலில் ஈடுபடுவதற்கும், துணிவுடன் சவால்களைச் சந்திப்பதற்கும் உங்களை நான் ஊக்குவிக்கிறேன். நமது உலகம் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டுவரும் இவ்வேளை, நமது சகோதரர் சகோதரிகள் பலரின் வலிநிறைந்த வேண்டுகோளையும் கேட்கிறோம்.

ஆயினும்கூட, நம் உலகத்தை அதன் மரணத் தறுவாயில் அல்ல பிறப்பின் தறுவாயில் அதாவது, அழிவின் பிடியில் அல்ல, ஆக்கத்தின் வழியில் அதன் புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தில் இருப்பதை காணும் வலிமை பெறுவோம். எனவே, மனிதரை மையமாக வைத்து வாழ்க்கையை மதிக்கும் ஒரு புதிய வாழ்க்கைக் கலையை கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.

இலக்கை அடையுங்கள்

சுய-பாதுகாப்பு என்பது எப்பொழுதும் ஒரு சலனத்தை ஏற்படுத்தும். எதார்த்தத்தைப் பற்றிய நமது பார்வையை சிதைக்கும். எனவே, உங்கள் சந்தேகங்களை கனவுகளாக மாற்றுங்கள்,  உங்கள் அச்சங்களுக்குப் பணயக்கைதியாகிவிடாதீர்கள். ஆனால் உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்யுங்கள்!

அறிவை ஒரு பொறுப்புணர்வாக ஏற்றுக்கொள்ளாத வரை, அது நிறைந்த பயனைத் தரமுடியாது என்பதை உணர்ந்திடுங்கள். உயர்கல்வியின் வழியாகப் பயனடைந்த ஒருவர் பதிலுக்கு ஏதாவது திரும்பக் கொடுக்க முயற்சி செய்யவில்லை என்றால், அவர் பெற்ற அறிவின் பலனை முழுமையாக அனுபவிக்க முடியாது.

உண்மைக் கிறிஸ்தவர்களாக மாறுங்கள்

தொடக்கநூலில் கடவுள் கேட்கும் முதல் கேள்விகள்: "நீ எங்கே இருக்கிறாய்?" (தொநூ 3:9) மற்றும் "உன் சகோதரன் எங்கே?" (தொநூ 4:9). இந்த இரண்டு கேள்விகளையும் நமக்கு நாமே கேட்டுக்கொள்வது நல்லது. அதாவது, நான் என்னுடைய சொந்த நலன்களில் சிக்கிக் கொண்டிருக்கிறேனா, அல்லது என் பாதுகாப்பை விட்டுவிட்டு, நீதியும் அழகும் நிறைந்த உலகத்தை வடிவமைக்க உழைத்து, உண்மையுள்ள கிறிஸ்தவனாக மாறத் தயாராக இருக்கின்றேனா? என்று நம்மை நாமே கேட்போம்.

இந்தப் பெரிய சவாலை ஏற்றுக்கொள்ளும் தலைமுறை உங்களுடையதாக இருக்கின்றது. மேலும், உங்களிடம் மிகவும் மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் உள்ளன, ஆனால் தயவு செய்து இவற்றைக் கொண்டு, குறுக்கியப் பார்வை மற்றும் பகுதியளவு அணுகுமுறைகளின் (partial approaches) வலையில் நீங்கள் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

பூமி மற்றும் ஏழைகள் துன்பம் அறிந்திடுங்கள்

பூமி மற்றும் ஏழைகள் ஆகிய இருவரின் துன்பங்களைக் குறித்து விழிப்பாய் இருப்பதில் ஓர் ஒருங்கிணைந்த சூழலியல் நமக்குத் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்புவியை பாலைவனமாக்கி புலம்பெயர்ந்தோரை வேதனையின் பிடிக்குள் தள்ளும் அவர்தம் துயரத்தைப் போக்கவேண்டும். பிறப்பு விகிதத்தைக் குறைத்து வரும் இடம்பெயர்வு பிரச்சினை மற்றும் ஆன்மிகத்தின் பெரிய எல்லைக்குள் வாழ்க்கையின் பொருள் பரிமாணத்தைப் பார்க்க வேண்டும்.

கல்விக்கான உலகளாவிய ஒப்பந்தம் (Global Compact on Education) என்பது, அதன் ஏழு அடிப்படைக் கொள்கைகளுடன், நமது பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதிலிருந்து பெண்களின் முழுப் பங்கேற்பு மற்றும் பொருளாதாரம், அரசியல், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் புரிந்துகொள்வதற்கான புதுமையான வழிகளின் தேவை வரை பல சிக்கல்களை உள்ளடக்கியது. ஆகவே,, உலகளாவிய நெருக்கம் குறித்து நீங்கள் ஆர்வமாக இருக்க வேண்டுமெனவும் உங்களை நான் ஊக்குவிக்கின்றேன்.

ஒவ்வொரு முறையும் யாராவது ஒருவர் விருந்தோம்பலுக்கான (hospitality) ஆதரவை வழங்கும்போது, ​​அது ஒரு மாற்றத்தைத் தூண்டுகிறது என்பதை உணர்வோம். நீங்கள் அறிவையும் கல்வி நிபுணத்துவத்தையும் பெறும்போது, ​​ஒரு தனிநபராக, சுய அறிவு மற்றும் உங்கள் எதிர்கால பாதையை அறியும் திறனில் வளர்வீர்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2023, 13:18