சிவகங்கை மறைமாவட்ட புதிய ஆயராக அருள்பணி லூர்து ஆனந்தம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
தமிழ்நாட்டின் சிவகங்கை மறைமாவட்ட ஆயராக அருள்பணி முனைவர் லூர்து ஆனந்தம் (மதுரை ஆனந்த்) அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 21 வியாழன் அன்று ஆயராக நியமிக்கப்பட்டதற்கான, திருத்தந்தை அவர்களின் ஆணையை, மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார். வரும் அக்டோபர் மாதம் முதல் தனது ஆயர் பணியை சிவகங்கையில் தொடர இருப்பதாகத் திருப்பீடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருள்பணி லூர்து ஆனந்தம் அவர்கள் சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள திருவரங்கத்தில் 1958 ஆகஸ்ட் 15 அன்று பிறந்தார். மதுரையில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் தத்துவம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித பவுல் குருத்துவக்கல்லூரியில் இறையியல் படித்தார்.
ஜெர்மனியின் Friburgo இல் உள்ள Albert Ludwig பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி மதுரை மறைமாவட்டத்திற்கு குருவாக நியமிக்கப்பட்ட அருள்பணி ஆனந்த் அவர்கள், மதுரை பேராயரின் செயலர் (1986-1989); கொடைக்கானல் திருஇருதய ஆலயப் பங்குத்தந்தை (1995-1999); சென்னை பூவிருந்தவல்லி திருஇருதய குருத்துவக்கல்லூரி இறையியல் பேராசிரியர் (1999-2004); நம் வாழ்வு கத்தோலிக்க வார இதழின் தலைமை ஆசிரியர் - (2004-2011); மதுரை புனித பேதுரு குருமட அதிபர் (2011-2014). என பல பொறுப்புக்களை ஆற்றியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மதுரை டவுன்ஹால் சாலையில் உள்ள ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தையாகவும், வட்டார அதிபராகவும் மதுரை மறைமாவட்டத்தில் உள்ள நொபிலி அருள்பணி மையத்தின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்