திருஅவையின் 21 புதிய கர்தினால்கள் திருஅவையின் 21 புதிய கர்தினால்கள்   (ANSA)

திருஅவையில் 21 புதிய கர்தினால்கள் நியமனம்

ஒருங்கிணைந்த பயணக் கூட்டத்தையும் திருஅவையின் செயல்பாடுகளையும் அடையாளப்படுத்தும் சிம்பொனி எனப்படும் கூட்டிசையை கர்தினால்கள் அவையுடன் ஒப்பிடலாம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

வெவ்வேறு இசைக்கருவிகளின் திறமையான கலவையான சிம்பொனி என்னும் கூட்டிசையில், ஒவ்வொன்றும் அதனதன் பங்களிப்பை அளிக்கின்றது என்றும், சில நேரங்களில் தனியாக, சில சமயங்களில் வேறொருவருடன் இணைந்து, சில சமயங்களில் முழு குழுமத்துடன் இணைந்து பன்முகத்தன்மையுடன் செயலாற்றுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 30 சனிக்கிழமை வத்திக்கானின் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற திருஅவையில் 21 புதிய கர்தினால்களை நியமிக்கும் செப வழிபாட்டின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இசைக்குழுவின் உருவத்தில் நம்மைப் பிரதிபலிப்பது, மற்றும் தலத்திருஅவையின் ஒருங்கிணைந்த பயணத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை சிறப்பாக் கற்றுக்கொள்வது நல்லது என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இசைக்குழுமத்தை ஒருங்கிணைத்து வழிநடத்துபவர், எல்லாருடைய குரலுக்கும் செவிமடுப்பவராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஒவ்வொரு நபரின் படைப்பாற்றலை வளர்க்கவும், செய்யும் பணிகளில் நம்பகத்தன்மையை உருவாக்குவதும் தலைவரின் முக்கியமான கடமை என்று வளியுறுத்திய திருத்தந்தை அவர்கள், படைப்பாற்றல் இசைக்கு ஓர் ஆன்மாவைக் கொடுத்து, தனித்துவமான முறையில் எதிரொலிக்கச் செய்ய வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

எப்போதும் இருக்கும் கொடையான நற்செய்தி அறிவிப்பு

திருத்தூதர் பணிகள் 2.1-11 இல் உள்ள பெந்தெகோஸ்து பெருவிழா பற்றிய இறைவார்த்தைகளை அடிக்கோடிட்டு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர்கள் குழுவைச் சாராத பார்த்தியர்கள், மேதியர்கள், எலாமியர்கள் போன்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் நாம் அனைவரும் தூய ஆவியின் ஆற்றலால் நற்செய்தியாளர்களாக மாறுகின்றோம் என்றும் கூறினார்.

உண்மையில், நற்செய்தியாளர்களாக உருவாக்கப்பட்டதன் ஆச்சரியத்தையும் நன்றியையும் நம் இதயங்களில் வைத்திருக்கும் அளவுக்கு நாம் இருக்கிறோம் என்றும், எப்போதும் இருக்கும் கொடையான நற்செய்தி அறிவிப்பானது நமது நினைவிலும் நம்பிக்கையிலும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பெந்தெகொஸ்தே என்பது திருமுழுக்கு அருளடையாளம் போல என்றோ ஒரு நாள் கடந்த காலத்தில் பெறப்பட்ட ஒன்று அல்ல மாறாக தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டிய ஒரு செயல் என்றும், திருஅவையும், திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும், தூயஆவியின் செயலின் வழியாகக் கடவுளின் வாழ்வில் வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கைக் கண்ணோட்டத்தில் வாழ்ந்தால், நாம் செய்யும் செயல்கள் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சிம்பொனி இசை 

ஒருங்கிணைந்த பயணக் கூட்டத்தையும் திருஅவையின் செயல்பாடுகளையும் அடையாளப்படுத்தும் சிம்பொனி எனப்படும் கூட்டிசையை கர்தினால்கள் அவையுடன் ஒப்பிடலாம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரின் குரலுக்கு செவிசாய்த்து அனைவரோடும் இணைந்து செயலாற்றும்போது  நமது வாழ்வும் செயலும் அழகான கூட்டிசையாக மாறும் என்று கூறினார்.

திருப்பீடத்தின் மூன்று துறைகளின் தலைவர்களாக அண்மையில் நியமிக்கப்பட்ட பேராயர்கள், மலேசிய ஆயர், ஹாங்காங் ஆயர், யெருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, சலேசிய துறவுசபையின் அதிபர் உட்பட 21 பேர் திருஅவையில் புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 30 சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை ஆறு மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் இரவு 9.30 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற திருவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த 21 பேருக்கும், கர்தினால்களுக்குரிய Berretto எனப்படும் சிவப்புநிற தொப்பி, Zucchetto எனப்படும் தலையை ஒட்டி தலையில் வைக்கப்படும் சிறுவட்டத்தொப்பி, மோதிரம் ஆகியவற்றை அணிவித்தார்.

நியமனம் செய்யப்பட்ட 21 கர்தினால்களில் 18 பேர் வாக்குரிமை பெற்றவர்கள் மற்றும் 3 வாக்குரிமை இல்லாதவர்கள். புவெனஸ் அய்ரேஸில் உள்ள பொம்பே திருத்தலத்தைச் சார்ந்த கர்தினால் லூயிஸ் பாஸ்குவல் டிரி அவர்கள் இச்செப வழிபாட்டில் பங்கேற்கவில்லை.

புதிதாக நியமனம் செய்யப்பட்ட  21 கார்தினால்கள் உட்பட மொத்தம் உள்ள 242 கர்தினால்களில் 137 பேர் வாக்குரிமை பெற்றவர்கள் 105 பேர் வாக்குரிமை இல்லாதவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2023, 11:23