திருத்தந்தையின் அக்டோபர் மாத செபக்கருத்து
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருஅவையின் இதயத்தில் உள்ள மறைப்பணியானது ஒருங்கிணைந்த பயணத்தில் இருக்கும் போது இன்னும் அதிகமாக செயலாற்றுகின்றது என்றும், இந்த சினோடல் என்னும் ஒருங்கிணைந்த பயணத்தின் பன்முகத்தன்மை, நற்செய்தியை அறிவிப்பதற்கான இயேசுவின் கட்டளைக்கு பதிலளிப்பதன் வழியாக அதன் மறைப்பணியை முன்னோக்கி கொண்டு செல்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அக்டோபர் மாத செபக்கருத்துக் காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது திருஅவைப் பயணத்தை தொடர்ந்து செயல்படுத்தாவிட்டால், எதுவும் முடிவடையாது என்பதனையும் நினைவுபடுத்தியுள்ளார்.
எம்மாவூ சீடர்களைப் போல நம்மை எப்போதும் சந்திக்க வரும் இயேசுவிற்கு செவிமடுத்து அவருடன் பயணிக்கும் பயணம் இந்த ஒன்றிணைந்த பயணம் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடவுள் ஆச்சரியங்களின் இறைவன் அவர் நம் வாழ்வில் பல வியப்பான செயல்களை ஆற்றுகின்றார் என்றும் கூறியுள்ளார்.
செபம், தெளிந்து தேர்தல் வழியாக, அப்போஸ்தல செவிமடுத்தலான அதாவது கடவுளின் காதுகள் கொண்டு இறைவார்த்தையைக் கேட்டு அதனை எடுத்துரைக்க தூய ஆவி நமக்கு உதவுகின்றார் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு இயேசுவின் இதயத்தை நெருங்கும் நாம் மறைப்பணி மற்றும் அவரது குரலால் ஈர்க்கப்படுகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நம்மை அவரை நோக்கி இழுக்கின்ற, அவரிடமிருந்து வருகின்ற குரல், எல்லாரையும் சென்றடைவது, அனைவரையும் தேடுவது, வரவேற்பது, ஒருவரையும் ஒதுக்காமல் அனைவரையும் ஒருங்கிணைப்பது போன்றவை தான் பணியின் இதயம் என்பதை நமக்கு வெளிப்படுத்துகிறது என்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருஅவைக்காக திருஅவையின் ஒருங்கிணைந்த பயணத்திற்காக செபிப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதன் வழியாக திருஅவை கேட்டல் மற்றும் உரையாடலை வாழ்க்கையின் முறையாக ஏற்றுக்கொண்டு, உலகத்தின் பகுதிகளை நோக்கி தூயஆவியானவரால் வழிநடத்தப்பட அனுமதிக்கிறது என்றும் அக்காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்