அளவற்ற விதமாக நம்மை அன்பு செய்யும் கடவுள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
நமது தகுதிகளைக் கணக்கிடாமல், அவரின் குழந்தைகளாகிய நம்மை அன்பு செய்யும் கடவுளின் அளவுகோல்களை திராட்சைத்தோட்ட வேலையாள்கள் உவமை வழியாக கடவுள் நமக்குக் காட்ட விரும்புகிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையின் போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம்மை அழைப்பதற்காக வருகின்றார். ஒரே அளவு அன்பைக் கொடுக்கின்றார் என்பதன் அடிப்படையில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
நம்மைத்தேடி அழைக்க வரும் கடவுள்
சூரியன் உதித்த நேரம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை வெளியில் சென்று பணியாளர்களை வேலைக்கு அமர்த்திய கடவுள், சோர்வடையாமல், மனிதர்களைத் தேடி நாள்முழுவதும் வெளியே செல்கின்றார் என்றும், அவரை சென்றடைய நாம் முயற்சி எடுக்கும் வரைக் காத்திருக்காமல் அதற்கு முன்பே அவர் நம்மை தேடி வந்து விடுகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.
புனித பெரிய கிரகரி மாங்னோவின் வார்த்தைகளான “முதுமை வரை நம் வாழ்வின் வெவ்வேறு பருவங்களையும் நேரங்களையும் அடையாளப்படுத்தும் எல்லா வேளைகளிலும் கடவுள் நம்மைத் தேடுகிறார், அவரது இதயம் ஒருபோதும் தாமதிக்காது, அவர் நம்மைத் தேடுகிறார், எப்போதும் நமக்காகக் காத்திருக்கிறார்” என்பதனையும் நினைவு கூர்ந்தார் திருத்தந்தை.
சமஅளவு கூலி - ஒரே மாதிரியான அன்பு
கடவுள் மிகவும் தாராள மனப்பான்பையுடன் இருப்பதால், அனைவருக்கும் ஒரு தெனாரியத்தை கூலியாகக் கொடுப்பதன் வழியாக அவருடைய அன்பை வெளிப்படுத்துகின்றார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அவரவர்களுக்குத் தகுதியானதைக் கொடுங்கள்" என்று கூறுவது மனித நீதி என்றும் அனைவருக்கும் சமமாகக் கொடுப்பது கடவுளின் நீதி என்றும் கூறினார்.
கடவுளின் நீதியானது, நமது வருமானம், செயல்திறன் மற்றும் தோல்விகளின் அளவுகோல்களில் அன்பை அளவிடுவதில்லை என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கடவுள் நம்மை அன்புசெய்கின்றார், அவரது குழந்தைகளாக இருப்பதால் அவர் நம்மை நிபந்தனையற்ற வகையில் இலவசமாக அன்பு செய்கின்றார் என்றும் கூறினார்.
சில சமயங்களில் நாம் கடவுளுடன் "வணிக" உறவை வைத்திருக்கும் அபாயம் உள்ளது, அவரது தாராள மனப்பான்மை அருளைவிட, நமது திறமையில் அதிக கவனம் செலுத்துகிறோம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாமும் தலத்திருஅவைகளும் உள்ளிருந்து வெளியே சென்று எல்லோரையும் கைகளைத் திறந்து வரவேற்க வேண்டும் என்றும், இதன்வழியாக கடவுள் அவர்களையும் அன்பு செய்கின்றார் என்பதனை எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்