மங்கோலியாவில் திருத்தந்தையின் மூன்றாம் நாள் பயண நிகழ்வுகள்

ஹன் திரையரங்கம் என்பது ஜெர் அல்லது யர்ட் வடிவத்தில் கட்டப்பட்ட ஒரு தேசிய திரையரங்கமாகும். இவ்வடிவமானது மத்திய ஆசியாவின் நாடோடி மக்களின் மிகவும் பழமையான வட்ட வடிவ குடியிருப்பை அடையாளப்படுத்துகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பல்சமய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டம்

கலை, நாட்டுப்புறக் கதைகள் என மங்கோலிய கலாச்சாரத்தினை மங்கோலிய மக்கள் தங்களது செயல்களில் வெளிப்படுத்த பாரம்பரிய நடனம், இசை, பாடல்கள் என நாடே மகிழ்வில் திளைத்துக் கொண்டிருக்கின்றது. தனது 43ஆவது திருத்தூதுப் பயணமாக மங்கோலியாவில் இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 2 சனிக்கிழமை முதல் தனது பயண நிகழ்வுகளைத் தொடங்கினார். காலையில் அரசுத்தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கான உரை, மாலையில் மங்கோலிய ஆயர், அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் மேய்ப்புப்பணியாளர்களுக்கான உரை என இரு உரைகளை ஆற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிற்றுக்கிழமை காலையில் பல்சமய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

செப்டம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை உலான்பாதர் உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் காலை 7.00 மணியளவில் திருப்பீடத்தூதரகத்திலிருந்து புறப்பட்டு 14.7 கிமீ தூரம் காரில் பயணித்து HUN THEATRE என்னும் திரையரங்கத்தை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இங்கு நடைபெற்ற பல்சமய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது திருத்தூதுப் பயணத்தின் மூன்றாம் உரையை ஆற்றினார்.

HUN THEATRE என்னும் தேசிய திரையரங்கம்

ஹன் திரையரங்கம் என்பது ஜெர் அல்லது யர்ட் வடிவத்தில் கட்டப்பட்ட ஒரு தேசிய திரையரங்கமாகும். இவ்வடிவமானது மத்திய ஆசியாவின் நாடோடி மக்களின் மிகவும் பழமையான வட்ட வடிவ குடியிருப்பை அடையாளப்படுத்துகின்றது. மேல்பகுதியில் வலையமைப்பால் மூடப்பட்ட ஒரு திறப்பைக் கொண்டு மங்கோலிய நாட்டுப்புற நிகழ்வுகள் நடப்பதற்கேற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடமானது மங்கோலியாவின் மிகப்பெரிய பகுதிகளில் ஒன்றான ஸ்கை ரிசார்ட்டில் அமைந்துள்ளது, இது போக்ட் கான் உல் மலையின் தெற்கில் தலைநகரில் இருந்து ஏறக்குறைய 13 கி.மீ  தூரத்தில் இக்கட்டிடம் அமைந்துள்ளது.

செப்டம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரம் காலை 10.00மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் காலை 7.30 மணிக்கு ஹன் திரையரங்கத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்போஸ்தலிக்க நிர்வாகி மற்றும் பல்சமயத் தலைவர்களால் வரவேற்கப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2023, 11:36