Velodrome அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் Velodrome அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

மர்சேய்லில் திருத்தந்தை இறுதி நாள் பயண நிகழ்வுகள்

செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை மத்திய தரைக்கடல் கூட்டங்களின் இறுதி நாளில் பங்கேற்று அவர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலையில் வெல்ட்ரோம் உள்புற விளையாட்டு அரங்கத்தில் மர்சேய்ல் மக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றினார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மர்சேய்ல் உள்ளூர் நேரம் மாலை 3 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் மாலை 7.30 மணிக்கு மர்சேய்ல் பேராயர் இல்லத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 8 கிமீ தூரம் காரில் பயணித்து வெலோட்ரோம் அரங்கத்தை வந்தடைந்தார். அரங்கத்தின் நுழைவாயிலை வந்தடைந்ததும் திறந்த காரில் வலம் வந்து திருப்பயணிகளை வாழ்த்தியபடியே திருப்பலி நிறைவேற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

 ஆரஞ்சு வெலோட்ரோம் அரங்கம்

ஆரஞ்சு வெலோட்ரோம் என்பது மர்சேய்லில் உள்ள பல்துறை விளையாட்டரங்கமாகும். அரங்கத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் விளையாட்டினைப் பார்க்கக்கூடிய வகையில் கட்டப்பட்ட உட்புற விளையாட்டரங்கமாகும். இது FR3 மத்திய தரைக்கடல் கோபுரத்திற்கு அருகில் உள்ள Boulevard Michelet 8 இல் அமைந்துள்ளது. அதிநவீன-கலை நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இந்த உள்புற விளையாட்டரங்கமானது, மர்சேய்ல் ஒலிம்பிக்,  பிரெஞ்சு தேசிய கால்பந்து அணி, பிரெஞ்சு தேசிய ரக்பி அணி ஆகியவற்றின் இடமாகவும், இசைக்கச்சேரி, மற்றும் அரசியல் கூட்டங்கள் நடத்தப்படும் இடமாகவும் உள்ளது. கட்டிடக் கலைஞர் ஹென்றி ப்ளோக்வின் வடிவமைப்பின்படி கட்டப்பட்ட இந்த அரங்கமானது 1937 இல் நடைபெற்ற மர்சேய்ல் மற்றும் தூரின் இடையிலான நட்பு ரீதியான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது திறக்கப்பட்டது.

தொடக்கத்தில் மிதிவண்டி ஓட்டுவதற்கான மைதானமாகவும் தடகளப்போட்டிகள் நடைபெறும் இடமாகவும் நீள்வட்ட வடிவத்தில் இருந்த காரணத்தால் வெலோட்ரோம் என்று அழைக்கப்படலாயிற்று. ஏறக்குறைய 35000 பேர் அமரும் அளவிற்கு இடப்பரப்பைக் கொண்ட இவ்வரங்கமானது 20 ஆம் நூற்றாண்டில் பல விரிவாக்கங்களுக்கு உட்பட்டது. குறிப்பாக 1998ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி, 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுகிடையிலான போட்டி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முழுமையாக புதுப்பிக்கப்பட்டு 67 ஆயிரம் இருக்கைகளைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2023, 10:04