சந்திப்பின் அடையாளமான அன்னை மரியா
ஜான் போஸ்கோ - வத்திக்கான்
அன்பு சகோதர சகோதரிகளே, விவிலியம் நமக்கு கூறுகிறது, தாவீது அரசர் தனது அரசை நிலைநாட்டியப்பின் உடன்படிக்கை பேழையை எருசலேமுக்கு கொண்டுவர முடிவுசெய்தார். மக்களுக்கு அழைப்பு விடுத்தபின், அவர் பேழையை கொண்டுவர புறப்படுகிறார். வழியில் அவரும் மக்களும் பேழையின்முன் ஆண்டவரின் பிரசன்னத்தில் மகிழ்ந்து நடனமாடுகின்றனர். இக்காட்சியின் பின்னணியில்தான் நற்செய்தியாளர் லூக்கா மரியா தனது உறவினரான எலிசபெத்தை சந்தித்ததை எடுத்துரைக்கின்றார். மரியா எருசலேம் பகுதிக்குச் சென்று, எலிசபெத்தின் வீட்டில் நுழைந்ததும், அவரது வயிற்றில் இருந்த குழந்தை மெசியாவின் வருகையை அடையாளம் கண்டு, மகிழ்ச்சியால் தாவீது பேழையின்முன் நடனமாடியதைப்போல நடனமாடத் தொடங்குகிறது.
மனுவுருவான இறைவனை உலகில் அறிமுகப்படுத்துவதன் வழியாக மரியா உடன்படிக்கைப் பேழையாக அடையாளப்படுத்தப்படுகிறார். மரியா ஓர் இளம்பெண், பிள்ளைப் பேறற்றவர் என்று எண்ணப்பட்ட வயதுமுதிர்ந்த ஒருப் பெண்ணை சந்திக்கச் செல்கிறார். இயேசுவை கொணர்வதில் கடவுளின் சந்திப்பின் அடையாளமாக மாறுகிறார். இந்நிகழ்வு எல்லா மலட்டுத்தன்மைகளையும் வீரியமற்ற தன்மைகளையும் வெற்றிகொள்கிறது. மரியா யூதாவின் மலைகளுக்கு செல்லும் நிகழ்வு, கடவுள் தம் அன்பால் நம்மைத் தேடிவருகிறார், நாம் மகிழ்ச்சியால் நிறைவோம் என்பதனையும் வெளிப்படுத்துகின்றது.
சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் கடவுள்
மரியா , எலிசபெத் ஆகிய இரு பெண்களின் சந்திப்பு, கடவுள் மனித குலத்தை சந்திப்பதை வெளிப்படுத்துகிறது. ஒருவர் இளம்பெண், மற்றவர் வயதானவர். ஒருவர் கன்னி, மற்றவர் மலடி. இருப்பினும் இருவருமே சாத்தியமற்ற வழியில் கருவுறுகிறார்கள். இதுதான் நமது வாழ்வில் கடவுளின் செயல்பாடு. கடவுள் சாத்தியமற்றதாகத் தோன்றுவதை சாத்தியப்படுத்துகிறார். மலட்டுத்தன்மையில் உயிரை உருவாக்குகிறார்.
அன்பு சகோதர சகோதரிகளே இதயத்திலிருந்து நம்மையே நாம் கேட்போம், கடவுள் நம் வாழ்வில் செயலாற்றுகிறார் என்பதை நாம் நம்புகிறோமா? கடவுள் மறைமுகமாக, எதிர்பாராத வழிகளில் அடிக்கடி வரலாற்றில் செயலாற்றுகிறார், அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்பதை விசுவசிக்கின்றோமா?
அவர் உலக மதச்சார்பின்மை மற்றும் சமய அலட்சியங்களால் குறிக்கப்பட்டுள்ள சமூகங்களிலும் செயலாற்றுகிறார். நாம் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டுள்ளோமா இல்லையா என தெளிந்து தேர்ந்திட ஒரு வழியுள்ளது. நற்செய்தி கூறுகிறது, மரியாவின் வாழ்த்தை எலிசபெத் கேட்டவுடன் வயிற்றிலிருந்த குழந்தை அக்களிப்பால் துள்ளிற்று. இதுதான் அடையாளம். மகிழ்ச்சியில் துள்ளுதல். யாரெல்லாம் நம்புகின்றார்களோ, யாரெல்லாம் செபிக்கின்றார்களோ, யாரெல்லாம் ஆண்டவரை வரவேற்கின்றார்களோ அவர்கள் ஆவியின் மகிழ்வில் துள்ளுகின்றார்கள். ஏதோவொன்று அவர்களை உந்தித்தள்ளுவதை உணர்கின்றார்கள், மகிழ்ச்சியில் நடனமாடுகின்றார்கள். விசுவாச துள்ளலில் மகிழ்வில் நாமும் நிறைய வேண்டும்.
தூய ஆவியின் ஆற்றலால் உண்டாகும் துள்ளல் அனுபவம்
நமது நம்பிக்கை அனுபவம் முதலாவதாக ஒரு குறிப்பிட்ட துள்ளலை வாழ்வின் முகத்தில் ஏற்படுத்துகிறது. துள்ளுதல் என்பது உள்ளார்ந்து தொடப்படுதல், நமது இதயத்தை ஏதோவொன்று உந்தித்தள்ளுகிறது என்பதை உணர்தல் ஆகும். இதற்கு எதிராக உள்ள இதயமானது ஒரு குறுகிய, குளிர்ந்த, அமைதியான வாழ்வுக்கு பழகிவிட்ட, அலட்சியங்களால் அடைக்கப்பட்ட, ஊடுருவ முடியாத அளவிற்கு கடினமான இதயமாக உருவாகிவிடுகிறது. இத்தகைய இதயம் அனைத்தையும் அனைவரையும் குறித்த உணர்வற்ற நிலைகளிலும், மனித உயிர்குறித்த நிராகரிப்பு போன்ற சோகமான நிலைகளிலும் வெளிப்படுகிறது. இது இன்று பல புலம்பெயர்ந்தோர், பிறக்காத குழந்தைகள், கைவிடப்பட்ட முதியவர்கள் ஆகியோரின் நிராகரித்தலில் வெளிப்படுகிறது. வீண்பெருமை, உத்வேகமின்மை, ஆர்வமின்மை போன்றவைகளைக் கொண்ட குறுகிய இதயமானது, நமது வாழ்வை இயந்திரத்தனமாக நகர்த்துகிறது.
நம்பிக்கையில் பிறந்தவர்கள் மேற்குறிப்பிட்டதற்கு மாறாக எலிசபெத்தின் வயிற்றில் இருந்த குழந்தையைப்போல் இறைவனின் பிரசன்னத்தை அறிந்துகொள்வார்கள். அவரின் பணிகளை ஒவ்வொரு நாளின் விடியலிலும் கண்டு கொள்கிறார்கள், உண்மையை நோக்குவதில் புதிய பார்வையை பெறுகிறார்கள். உழைப்பு, பிரச்சனைகள் மற்றும் துன்பங்களுக்கு மத்தியிலும், ஒவ்வொரு நாளும் நம்மத்தியிலான கடவுளின் சந்திப்பை தெளிந்து தேர்ந்துகொள்கிறார்கள், இறைவனின் உடன்நடத்தலையும், அவரின் நிலையான உடனிருத்தலையும் உணர்கின்றார்கள். வாழ்வின் மறைபொருள் மற்றும் சமூகத்தின் சவால்களை எதிர்கொள்ளும்போது நம்பிக்கைக் கொண்டவர்கள், தங்களின் வாழ்வில் மகிழ்வு, வசந்தம், பேரார்வம் போன்றவற்றை உற்பத்தி செய்யும் கனவு, தனிப்பட்ட முறையில் தங்களையே அர்ப்பணித்துக்கொள்ள தூண்டும் ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டிருப்பார்கள். எல்லாவற்றிலும் இறைவன் பிரசன்னமாக இருக்கிறார் என்பதை உணர்ந்து மனத்தாழ்மையோடு நற்செய்திக்கு சான்று பகரவும், புதிய உலகை கட்டியெழுப்புவதற்காக கொடைகள் மற்றும் தனிவரங்களைப் பயன்படுத்தும் தெளிவையும் அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.
கடவுளின் சந்திப்பு எளிமையான சந்திப்பு
கடவுளின் சந்திப்பு, அசாதாரணமான விண்ணுலக நிகழ்வுகள் வழியாக நடைபெறவில்லை. மாறாக ஒரு எளிமையான சந்திப்பாக அமைந்தது. கடவுள் ஒரு குடும்பத்தின், வீட்டின் கதவு வழியாக, இரண்டு பெண்களின் மென்மையான அரவணைப்பில், அதிசயம் நம்பிக்கை இவற்றால் பின்னிப்பிணைந்த இரு கருவுறுதல்களில் வருகின்றார். இங்கே மரியாளின் வேண்டுகோள், எலிசபெத்தின் ஆச்சரியம், மகிழ்வின் பகிர்வு போன்றவற்றைக் காண்கின்றோம்.
இதனை எப்போதும் நினைவில் கொள்வோம். கடவுள் உறவானவர். மற்றவர்களுக்கு நம்மை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று தெரியும்போது, ஒவ்வொரு நாளும் நம்மை கடந்து செல்பவர்களின் நன்மைக்காக நமக்குள் கலக்கம் ஏற்படும்போது, வலிமையற்றவர்களின் காயங்களுக்கு முன்னால் நமது இதயம் செயல்படாமலும், உணர்வற்றும் இருக்கும்போது ஏற்படும் மனித சந்திப்புகளின் வழியாக கடவுள் நம்மை அடிக்கடி சந்திக்கிறார்.
நமது பெரிய நகரங்கள், பிரான்ஸ் போன்ற பல ஐரோப்பிய நாடுகள் பல்வேறு கலாச்சாரங்களும், மதங்களும் இணைந்து வாழும் சூழலானது, தனிமை மற்றும் துன்பங்களை உண்டாக்கும் அதிகப்படியான தனித்துவம், சுயநலம் மற்றும் புறக்கணிப்பு இவைகளுக்கு எதிரான வலிமையான சக்தியாக உள்ளது. அயலாருக்கு உதவுவதற்காக நாம் எப்படி நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என இயேசுவிடம் கற்றுக்கொள்வோம். சோர்ந்து களைத்துப்போய் இருந்த மக்கள்பால், காயப்பட்டிருந்த சதைகளைக் கொண்டிருப்பவர்களின்பால் பரிவு காட்டிய இயேசுவிடம் கற்றுக் கொள்வோம். உங்களுடைய பெரும் புனிதர்களில் ஒருவரான வின்சென்ட் தெ பவுல் அறிவுறுத்துகிறார், நாம் நமது இதயங்களை மென்மையாக்க வேண்டும், நமது அயலவரின் துன்பங்கள் மற்றும் துயரங்களை குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். ஏழைகள்தான் நம்முடைய ஆண்டவரும் தலைவரும் என அடையாளம் காணும்வரை கடவுளின் ஆவியான இரக்கத்தின் ஆவியை நமக்கு அளிக்க வேண்டுமென்று கடவுளை மன்றாட வேண்டும்.
நற்செய்தியில் அழகாக வாழ்வை உருமாற்றுங்கள்
அன்பு சகோதர சகோதரிகளே பிரான்சிற்குள்ளாகவே உள்ள அதன் வளமான புனித கலாச்சார வரலாறு, பல தலைமுறையினரை ஊக்கப்படுத்திய ஓவியர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் ஆகியோரை நினைத்துப்பார்க்கின்றேன். எதிர்கால வாழ்விற்கான அருள், நம்பிக்கை, பிறரன்பு ஆகியவை இன்று நமது வாழ்விற்கும், திருஅவை வாழ்விற்கும், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவிற்கும் தேவையாக உள்ளது. நமது வேட்கை, ஆர்வம் இவற்றை மீண்டும் கிளர்ந்தெழச் செய்ய வேண்டும். சகோதரத்துவத்திற்கு நம்மையே அர்ப்பணிக்கும் ஆர்வத்தை மீண்டும் எழுப்ப வேண்டும். நமது குடும்பங்களையும், வலிமை குன்றியவர்களையும் அன்பு செய்யும் துணிச்சல், நற்செய்தியில் வாழ்வை அழகாக்கும் உருமாற்றும் அருளை கண்டுபிடித்தல் ஆகியவையே இன்றைய தேவையாகும்.
பயணத்தை மேற்கொள்வதில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டு, நமக்கு கடவுளின் வழியை கற்பிக்கும் மரியாவை உற்றுநோக்குவோம். அவர் நம்மை அசௌகரியங்களுக்கு மத்தியிலும் நகர்த்துகிறார், எலிபெத்திற்கு ஏற்பட்ட துள்ளல் அனுபவத்தை நம்மில் உருவாக்குகிறார். செபத்தில் கடவுளை சந்திக்கும், அன்பில் சகோதர சகோதரிகளை சந்திக்கும் கிறிஸ்தவர்களாக நாம் இருக்க அழைக்கின்றார். துள்ளல் மகிழ்ச்சி, போன்றவற்றால் தூய ஆவியின் ஆற்றலைப் பெற்றுக்கொள்ளும் கிறிஸ்தவர்களாகிய நாம், மத்திய தரைக்கடலின் சவால்கள், ஏழைகளின் அழுகுரல், சகோதரத்துவம், அமைதி ஆகியவைகளால் நம்மையே புதுப்பித்துக் கொள்வோம்.
உங்களோடு சேர்ந்து நானும் நமது அன்னையிடம் மன்றாடுகின்றேன். அவர் உங்கள் வாழ்வை கவனித்துக் கொள்வார். அவர் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவை பாதுகாப்பார். அவர் நம்மை ஆவியால் துள்ளச் செய்வார். பவுல் கிளௌடல் அவர்களின் வார்த்தைகளால் இந்த செபத்தை அர்ப்பணிக்க விரும்புகிறேன். ‘‘ஆலயம் திறந்துள்ளது. காணிக்கை செலுத்தவோ, வேண்டுதல் செய்யவோ ஒன்றுமில்லை. அன்னையே உன்னை பார்ப்பதற்காக மட்டுமே வருகிறேன். உன்னை காணும் மகிழ்விற்காக. உமது மகன் எனக்காக நீர் இருக்கின்றீர் என தெரிந்து வருகிறேன். மரியே, நீர் இருக்கும் இந்த இடத்தில் நீர் எப்போதும் என்னுடன் இருக்கின்றீர், எளிமையாக இருக்கின்றீர். இயேசு கிறிஸ்துவின் தாயே உமக்கு நன்றி‘‘.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்