மர்சேய்ல் அன்னை மரியா திருத்தலம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
Notre-Dame-de-la-Garde
நோத்ரே தெம் தி கார்தே என்னும் திருத்தலம் லா போன் மாதர் அதாவது நல்ல அன்னை என்னும் பெயரில் அழைக்கப்படுகின்றது. ஏனெனில் மர்சேய்லில் வாழும் மாலுமிகள், மீனவர்கள் மற்றும் மார்சேயில் மக்களுக்கு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் சின்னமாக இத்திருத்தலம் உள்ளது. மர்சேய்லின் மிகவும் புகழ்பெற்ற சின்னமாக பழைய துறைமுகத்தின் தெற்கே 162 மீ உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இத்திருத்தலமானது ஆயர் மசெனோட் அவர்களின் முயற்சியால், கட்டிடக் கலைஞர் எஸ்பரண்டியூவால் கட்டமைக்கப்பட்டது. 1853 செப்டம்பர் 11 இல் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப்பணிகள் 1864 ஜூன் 4 அன்று நிறைவுற்றன. 35 மீட்டர் நீளமான படிக்கட்டுக்களைக் கொண்ட இத்திருத்தலத்தின் மேல் மட்டமானது நியோ-பைசண்டைன் முறையிலும், கீழ் மட்டமானது உரோமன் முறையில் அடிநிலக்கோயில் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடம்பரமான 41 மீ உயரமான மணி கோபுரமும் அதன் மேல் அன்னை மரியாவின் அற்புதமான திருஉருவச்சிலையும் அமைந்துள்ளது. கையில் குழந்தை இயேசுவைக் கொண்டுள்ள அன்னை மரியாவின் திருஉருவச்சிலை 11.20 மீ உயரம் மற்றும் 9,796 கிலோ எடையுடன் கூடிய தங்க செம்பு நிறத்தாலானது., பாரிஸ் சிற்பி யூஜின்-லூயிஸ் லெக்வெஸ்னேவின் கைவேலைப்படால் உருவான இச்சிலை 1870 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
லா கார்தே திருத்தலத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மின்தூக்கியின் உதவியுடன் திருத்தலத்திற்குள் வந்தடைந்தார். அதன் பின் மர்சேய்ல் உயர்மறைமாவட்ட பேராயர் மற்றும் மக்களால் வரவேற்கப்பட்டார். புனித நீரால் சிலுவை அடையாளம் வரைந்து அங்குள்ளவர்களை ஆசீர்வதித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பீடத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அன்னை மரியா திருஉருவச்சிலை முன்பு சிறிது நேரம் அமைதியில் செபித்து, மெழுகுதிரி ஒன்றினை அன்னையின் முன் அர்ப்பணித்தார்.
மர்சேய்ல் உயர்மறைமாவட்ட பேராயரான கர்தினால் Jean-Marc Aveline அவர்களின் தொடக்க உரையுடன் ஆரம்பமான மரியன்னை வழிபாடானது, வழிபாட்டுப்பாடல்களுடன் திருப்பாடல் எண் 44 பாடப்பட்டது. அதன் பின் இறைவாக்கினர் செப்பனியா நூல் அதிகாரம் 3 உள்ள 14 முதல் 17 வரையுள்ள இறைவார்த்தைகள் பிரெஞ்சு மொழியில் வாசிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து திருத்தந்தை தனது 44ஆவது திருத்தூதுப் பயணத்தின் முதல் உரையினை மர்சேய்ல் மறைமாவட்ட அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தாருக்கு எடுத்துரைத்தார்.
இயேசுவைப் பார்க்கும் பார்வை, மற்றவர்கள் இயேசுவைப் பார்க்க உதவும் பார்வை என சந்திப்புப் பார்வைகளைப் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்களின் உரையைத்தொடர்ந்து அன்னை மரியாவிற்கான செபம் செபிக்கப்பட்டது. அதன் முடிவில் கூடியிருந்த மக்களுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இறுதிப்பாடலுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்