மங்கோலியாவில் வரவேற்பு மங்கோலியாவில் வரவேற்பு  (AFP or licensors)

மங்கோலியாவின் ஆழ்ந்த அமைதியைப் புரிந்துகொள்வது நல்லது

ஒன்றிணைந்த நம்பிக்கை என்ற தலைப்பில் திருத்தந்தை மேற்கொள்ளும் இத்திருத்தூதுப் பயணமானது மக்களின் அமைதிக் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் விதமாக உள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மங்கோலியாவுக்குச் செல்வது என்பது ஒரு பெரிய நிலத்தில் உள்ள ஒரு சிறிய மக்களிடம் செல்வதாகும் என்றும், குறைந்த மக்களைக் கொண்டதும் பெரிய கலாச்சாரம் கொண்டதுமான மங்கோலியாவில் மக்களின் ஆழ்ந்த அமைதியை அறிவுப்பூர்வமாக அல்ல, புலன்களால் புரிந்து கொள்ள முயலவேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 31, வெள்ளிக்கிழமை மாலை மங்கோலிய  நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமானத்தில் தன்னுடன் பயணித்த ஏறக்குறைய 70 தகவல் தொடர்புப்பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுடன் நடத்திய உரையாடலின் போது இவ்வாறு கூறினார்.

ஒன்றிணைந்த நம்பிக்கை என்ற தலைப்பில் தான் மேற்கொள்ளும் இத்திருத்தூதுப் பயணமானது மக்களின் அமைதிக் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் விதமாகவும், எளிய மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் செயலாகவும் இருக்கும் என்று தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

போரோடின் என்னும் மங்கோலிய இசை, நாட்டின் அழகையும், நிலப்பரப்பின் மேன்மை, கலாச்சாரம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இத்தாலியின் டூரின் பகுதியில் உள்ள பிராண்டிசோவில், ஐந்து தொழிலாளர்கள் இரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ANSA பத்திரிகையாளர் Fausto Gasparroni எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணியிடத்தில் ஏற்படும் விபத்துகள் பேரிடர் என்றும், எப்போதும் கவனிப்பு இல்லாது தொழிலாளர்கள் இவ்வாறு துன்புறுவது அநியாயம் என்றும் எடுத்துரைத்து  தொழிலாளர்கள் புனிதமானவர்கள் என்றும் வலியுறுத்தினார்.  

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2023, 15:05