திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

அணு ஆயுதங்களை வைத்திருப்பது ஒழுக்கக்கேடானது

திருத்தந்தை 23ஆம் ஜான் அவர்கள் எழுதிய உலகில் அமைதி (Pacem in Terris) என்ற மடல் வலியுறுத்துவது போல, எதிர்பாராத நிகழ்வு போர் இயந்திரத்தை இயக்குகிறது

மெரினா ராஜ் – வத்திக்கான்

அணு ஆயுதங்களை வைத்திருப்பது ஒழுக்கக்கேடானது என்றும், திருத்தந்தை 23ஆம் ஜான் அவர்கள் எழுதிய உலகில் அமைதி' (Pacem in Terris) என்ற மடல் வலியுறுத்துவது போல, எதிர்பாராத நிகழ்வு போர் இயந்திரத்தை இயக்குகிறது என்றும் தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 26, செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட அணு ஆயுதங்கள் ஒழிப்பு உலக நாளை முன்னிட்டு, இவ்வாறு தனது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அணு ஆயுத அச்சுறுத்தலின் கீழ் நாம் அனைவரும் எப்போதும் தோற்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டில், உலகில் 13,080 அணு ஆயுதங்கள் சேமிப்பில் இருந்துள்ளன என்றும்,  இவற்றில் 90 விழுக்காட்டுக்கும் மேலான ஆயுதங்களை, அமெரிக்க ஐக்கிய நாடும் இரஷ்யாவும் வைத்துள்ளன மற்றும் இவற்றில் ஏறத்தாழ முப்பது விழுக்காடு, இராணுவத்தால் பயன்படுத்தப்படுகின்றன என்று அறிவித்துள்ளது Stockholm உலகளாவிய அமைதி ஆய்வு நிறுவனம்.

2016ஆம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி, தென்அமெரிக்க நாடான கொலம்பியாவின் Cartagena de Indiasல் அரசுக்கும், FARC புரட்சிக் குழுவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, அந்நாட்டில் இடம்பெற்ற ஐம்பது வருட உள்நாட்டுப் போர் நிறைவுக்கு வந்ததை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அணு ஆயுதங்கள் ஒழிப்பு உலக நாளானது கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2023, 13:24