Christmas Contest குழுவினருடன் திருத்தந்தை Christmas Contest குழுவினருடன் திருத்தந்தை  (VATICAN MEDIA Divisione Foto)

நல்லிணக்கம், படைப்பாற்றல் கொண்டது இசைக்கலை

கலைஞர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தவும், பிறருடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு கருவியாகவும் இசை திகழ்கின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இசை என்பது இணக்கம் மற்றும் படைப்பாற்றல் எனும் இரண்டும் கொண்ட ஒரு கலை என்றும், இந்த அர்த்தத்தில் இசையமைப்பது வாழ்க்கைக்கான ஓர் உருவகம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 16 சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தொரோ அறையில் கிறிஸ்துமஸ் காண்டெஸ்ட் என்னும் கிறிஸ்துபிறப்பு விழா போட்டிகளில் பங்கேற்கும் இளம் இசைக்கலைஞர்கள், அதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய அனைவரையும் சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இசை நம்மைப் பற்றி மட்டுமல்லாது, கடவுளைத் தேடுதல் பற்றியும், சில சமயங்களில் கடவுளைப் பற்றியும் பேசுகிறது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நல்லிணக்கமும் படைப்பாற்றலும் கொண்ட கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் இந்த கிறிஸ்துமஸ் காண்டெஸ்ட் என்னும் கிறிஸ்துபிறப்பு விழா இசை நிகழ்வு கொண்டாடப்படுகின்றது என்றும் எடுத்துரைத்தார்.

எல்லாம் வல்ல இறைவன் சிறிய குழந்தையாக மாறி, தன் தெய்வீக அன்பின் எல்லையற்ற அரவணைப்பை மனிதர்களுக்கு வெளிப்படுத்துகின்றார் என்றும், மனிதர்களாகிய நமது குரலுக்கு செவிசாய்க்கவும், மனிதகுலத்துடன் இணக்கத்தை உருவாக்கவும் அவர் மனிதராகப் பிறந்தார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆச்சரியமான படைப்பாற்றல் கொண்டு ஒரு குழந்தையின் கண்களால் நம்மைப் பார்க்கிறார், அவரது மென்மையால் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இந்நிகழ்வு டிசம்பர் 25 அன்று மட்டுமன்று ஒவ்வொரு நாளும் நடக்கின்றது என்றும் கூறினார்.

இசைக்கலைஞர்களாகிய அவர்கள் இசையின் கனவையும் வலிமையையும் தங்களது தொலைநோக்குப்பார்வையில் காணவும், அதன் வழியாக  பிறருக்கு அதை ஒரு பரிசாக வழங்கவும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கலைஞர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தவும், பிறருடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு கருவியாகவும் இசை திகழ்கின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ப்பணிப்புடன் உருவாக்கப்படும் இசையானது மற்றவர்களின் மனதிற்கு மகிழ்ச்சியை அளித்து ஆக்கப்பூர்வமான பரிசாக மாறுகின்றது.     

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2023, 11:32