அணுஆயுத ஏவுகணைகள் அணுஆயுத ஏவுகணைகள்  (©Scanrail - stock.adobe.com)

பல்வேறு கூறுகளாக இன்றைய உலகில் மூன்றாம் உலகப்போர்

திருத்தந்தை 23ஆம் ஜான் அவர்களின் “Pacem in Terris”, அதாவது, அவனியில் அமைதி என்ற சுற்றுமடல் வெளியிடப்பட்டதன் 60ஆம் ஆண்டு நிறைவு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அணுஆயுதங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும், ஏனைய ஆயுதங்கள் கூட தற்காப்புக்காக அன்றி வேறு எச்சூழலிலும் பயன்படுத்தப்படக்கூடாது எனவும் அனைவரையும் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை 23ஆம் ஜான் அவர்களின் “Pacem in Terris”, அதாவது, அவனியில் அமைதி என்ற சுற்றுமடல் வெளியிடப்பட்டதன் 60ஆம் ஆண்டு நிறைவையொட்டி இடம்பெறும் வத்திக்கான் கருத்தரங்கில் பங்குபெறுவோருக்கு அனுப்பியுள்ளச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

நார்வே நாட்டுத் தலைநகர் ஓஸ்லோவிலுள்ள அமைதி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து வத்திக்கானின் சமூக அறிவியல் கழகம் ஏற்பாடுச் செய்துள்ள கருத்தரங்கிற்கென அக்கழகத்தின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ளச் செய்தியில், பல்வேறு கூறுகளாக இன்றைய உலகில் இடம்பெற்று வரும் மூன்றாம் உலகப்போர், உக்ரைனின் துயரம் தரும் மோதல்கள், மற்றும் அணு ஆயுதம் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் போன்றவைகளின் மத்தியில் இக்கருத்தரங்கு ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

1962ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகை அணு ஆயுத பயன்பாட்டின் விளிம்புவரை இட்டுச் சென்ற கியூப ஏவுகணை நெருக்கடியைத் தொடர்ந்து திருத்தந்தையின் Pacem in Terris ஏடு வெளியிடப்பட்டது என தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, இன்றைய பதட்ட நிலைகளையும் அதனோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.

அமைதிக்கு இராணுவ மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான அச்சுறுத்தல்கள், அணு ஆயுதங்கள் தொடர்ந்து வைக்கப்படிருப்பது குறித்த ஒழுக்க ரீதி கேள்விகள், ஆயுத ஒழிப்பு முயற்சிகளை புதுப்பித்தல், அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் முன்னேற்றம் போன்றவை குறித்து, இக்கருத்தரங்கில் பங்குபெறுவோர் விவாதிக்க வேண்டும் என அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை, அணுசக்தியை போருக்கெனெ பயன்படுத்துவதும், அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதும் நன்னெறிக் கொள்கைக்கு எதிரானவை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுத ஒழிப்பு என்பது  இயலக்கூடியது, மற்றும் அவசியமானது எனவும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அணுஆயுதங்கள் இவ்வுலகிலிருந்து ஒழிக்கப்படும் அதேவேளையில் ஏனைய ஆயுதங்களும் தற்காப்புக்காக அன்றி ஏனைய காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவதும் நீக்கப்படவேண்டும் என மேலும் அச்செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2023, 14:48