நாம் என்றும் கடவுளுக்கே சொந்தமானவர்கள்

நாணயத்தில் பேரரசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தாலும், நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய காரியம் என்னவென்றால், நம் வாழ்வில் கடவுளின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது என்பதுதான் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நமது நம்பிக்கையும் அன்றாட வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லை என்று நாம் கருதக்கூடாது, மாறாக, அவை இரண்டுமே ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்புடையது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 22, இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இறைவனுக்கு மட்டுமே சொந்தமானவர்கள், இவ்வுலம் காட்டும் மதிப்பீடுகளுக்கு அல்ல என்றும் எடுத்துக்காட்டினார்.

இன்றைய ஞாயிறு நற்செய்தி வாசகமான மத்தேயு நற்செய்தியிலிருந்து (மத் 22: 15-21) தனது மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை, பரிசேயரும் ஏரோதியரும் இயேசுவிடம் வந்து,  "சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்” என்று கேள்விகேட்டு அவரை சிக்கலில் மாட்டிவிட எண்ணியபோது, “சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று கூறி அவர்களை வியக்கச் செய்தார் என்றும் விளக்கினார்.

நம்பிக்கையும் அன்றாட வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லை என்றுதான் நாம் சில வேளைகளில் நினைக்கின்றோம். ஆனால் அவை இரண்டுமே ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்புடையவை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும், உண்மையில் சீசரையும் கடவுளையும் சரியாக அவரவர் இடத்தில் வைப்பதற்கு இயேசு நமக்கு உதவ விரும்புகின்றார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

இதன்வழியாக, மனிதர் கடவுளுக்குச் சொந்தமானவர் என்ற அடிப்படை எதார்த்தத்தை உறுதிப்படுத்தும் இயேசு, நாம் இப்புவிக்குரிய எந்தவிதமான எதார்த்தத்திற்கும்  இந்த உலகின் எந்த சீசருக்கும் சொந்தமானவர்கள் அல்ல என்பதையும் எடுத்துக்காடுகிறார் என்றும் திருப்பயணிகளுக்குத் தெளிவுபடுத்தினார் திருத்தந்தை.

நாணயத்தில் பேரரசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தாலும், நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய காரியம்  என்னவென்றால், நம் வாழ்வில் கடவுளின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது என்பதுதான் என்றும், இதை நம்மில் யாராலும் மறைக்க முடியாது என்றும் நினைவுபடுத்தினார் திருத்தந்தை.

இந்த உலகத்தின் காரியங்கள், சீசருக்கு சொந்தமானது என்றாலும் மனிதரும் இவ்வுலகமும் கடவுளுக்கு சொந்தமானது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் நம் ஒவ்வொருவரையும் அவரவர் அடையாளத்திற்கு மீட்டெடுக்கிறார் என்றும், தங்களுக்கு இந்தச் சரியான புரிதல் இருக்கிறதா அல்லது சில தனிப்பட்ட பாசாங்குத்தனங்களைக் கடக்க வேண்டுமா என்று விசுவாசிகள் அனைவரும்  தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.

நாம் இறைவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதை நினைவில் கொள்கிறோமா, அல்லது உலகத்தின் தர்க்கத்தால் நம்மை வடிவமைத்து, வேலை, அரசியல் மற்றும் பணத்தை நம் சிலைகளாக ஆக்கிக்கொள்கிறோமா? என்பது குறித்தும் சிந்திப்போம் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நம்முடைய மற்றும் ஒவ்வொரு மனிதரின் மாண்பையும் அங்கீகரிக்கவும் மதிக்கவும் நமக்கு உதவும்படி நம் அன்னை மரியாவை நோக்கி மன்றாடுவோம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2023, 16:26