திருத்தந்தையுடன் உரையாடும் சகோதரி Saleh மற்றும் அருள்தந்தை Yusuf திருத்தந்தையுடன் உரையாடும் சகோதரி Saleh மற்றும் அருள்தந்தை Yusuf 

காசாவில் அமைதி நிலவட்டும்! : திருத்தந்தை பிரான்சிஸ்

போரினால் மக்கள் பலர் தங்கள் அன்புக்குரியவர்கள், வீடுகள் மற்றும் தங்களிடம் உள்ள அனைத்தையும் இழந்துள்ளனர். தற்போது எங்களுக்கு நீதியும் அமைதியும் தேவை : சகோதரி Nabila Saleh

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசாவில் போரால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுடனும் தான் ஒன்றித்திருப்பதாகவும், அவர்களுக்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

காசாவில் உள்ள திருக்குடும்ப பங்குத்தள மக்களுடன் தொலைபேசியில் உரையாடியபோது இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  துன்புறும் மக்களுக்காக உதவிவரும் எருசலேமின் செபமாலை அன்னை சபை சகோதரிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

அக்டோபர் 16, திங்களன்று நிகழ்ந்த திருத்தந்தையின் இந்தத் தொலைபேசி உரையாடல் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலில் அச்சபையின் சகோதரி Nabila Saleh அவர்கள், இந்தப் பங்குத்தளத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் தஞ்சமடைந்துள்ளனர் என்று திருத்தந்தை தன்னிடம் கேட்டறிந்ததாகவும் கூறினார்.

நோயாளர்கள், குடும்பங்கள், குழந்தைகள், ஊனமுற்றோர், வீடுகள் மற்றும் உடமைகளை இழந்தவர்கள் உட்பட ஏறத்தாழ  500 பேர் அப்பங்கில் உள்ளதாகவும், திருத்தந்தையுடன் தான் பேச முடிந்தது தனக்குக் கிடைத்த மிகப்பெரும் ஓர் ஆசீர்வாதம் என்றும் கூறிய அருள்சகோதரி Saleh அவர்கள், திருத்தந்தையின் செபம் தங்களுக்கு வலிமையையும் ஆதரவையும் வழங்கியதாகவும் எடுத்துரைத்தார்.

மேலும் புனித நாட்டில் அமைதி நிலவ அனைவருக்கும் அழைப்பு விடுக்குமாறு தான் திருத்தந்தையிடம் விண்ணப்பித்ததாகவும், காசாவிலுள்ள கத்தோலிக்கர்கள் போர் முடிவுக்கு வரவும், அமைதி நிலவவும், திருஅவையின் தேவைகளுக்காகவும், உலக ஆயர்கள் மாமன்றத்திற்காகவும் தங்களின் துயர் நிறைந்த செபங்களை ஒப்புக்கொடுப்பதாகவும் திருத்தந்தையிடம் கூறியதாகவும் தெரிவித்தார் அருள்சகோதரி Saleh

இப்போர் நிறைந்த சூழலிலும் கூட இப்பங்குதளத்தில் தினமும் இரண்டு திருப்பலியில் நடைபெறுவதாகவும், மக்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலும் ஆறுதலும் அளிப்பதாகவும், குழந்தைகளுடனும் அவர்தம் குடும்பங்களுடனும் இணைந்து செபமாலை செபிப்பதாகவும் வத்திக்கான் செய்திகளுக்குத் தெரிவித்தார் அருள்சகோதரி Saleh.

பாலஸ்தீனத்தில் அமைதி மற்றும் நீதிக்கான வேண்டுகோளுடன் தனது நேர்காணலை நிறைவு செய்த அருள்சகோதரி Saleh அவர்கள், "நாங்கள் எப்போதும் அமைதியை விரும்புகிறோம், ஏனென்றால் போர் யாருக்கும் எந்த நன்மையும் செய்யாது, ஆகவே இந்தக் கொடூரமான போர் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், என்றும் கூறினார்.

அதேவேளையில், இப்போரினால் மக்கள் பலர் தங்களின் அன்புக்குரியவர்கள், வீடுகள் மற்றும் தங்களிடம் உள்ள அனைத்தையும் இழந்துள்ளதாகவும், தங்களுக்கு நீதியும் அமைதியுமே தற்போது தேவை என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 October 2023, 14:10