உலக உணவு நாளுக்குத் திருத்தந்தையின் செய்தி
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஏழைகளின் வேதனை மற்றும் அழுகை, நம் சோம்பலில் இருந்து நம்மை எழுப்பி, நம் மனசாட்சிக்கு சவால் விட வேண்டும் என்றும், நீரை ஒருபோதும் வெறும் பொருளாகவோ, பரிமாற்றத்தின் பொருளாகவோ அல்லது ஊக்கத்திற்கான பொருளாகவோ கருதக்கூடாது மாறாக உயிராகக் கருதவேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 16 திங்கள் கிழமை சிறப்பிக்கப்படும் உலக உணவு நாளை முன்னிட்டு FAO எனப்படும் ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Qu Dongyu அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதர்களை கடுமையாகத் துன்புறுத்தும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு நிலை, அநியாயங்கள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளின் விளைவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உணவுக்கு மட்டுமன்று, அனைத்து அடிப்படை வளங்களுக்கும் பொருந்தக்கூடிய பற்றாக்குறை கடவுள் கொடுத்த மனித மாண்பிற்கு ஒரு அவமானத்தை ஏற்படுத்துகின்றது என்றும், சந்தேகத்திற்கு இடமின்றி, மனிதகுலம் முழுவதையும் வெட்கப்படச் செய்து பன்னாட்டு சமூகத்தை அணிதிரட்டி உடனடியாக செயல்பட தூண்டுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“நீரே உணவு, நீரே உயிர்“ என்ற கருப்பொருளில் கொண்டாடப்படும் இவ்வாண்டு உலக உணவு நாளானது, ஒருவரையும் ஒதுக்காமல் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் சமமாக, உலக வளத்தின் ஈடுசெய்ய முடியாத மதிப்பை முன்னிலைப்படுத்த நம்மை அழைக்கிறது என்று எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உயிர் வாழ்வதற்கு உறுதி தருவதால் நீர் உயிராகக் கருதப்படுகின்றது இருப்பினும், இந்த வளமானது, அளவு, தரம் ஆகியவற்றின் அடிப்படையில் கடுமையான சவால்களால் அச்சுறுத்தப்படுகிறது என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் பல இடங்களில், நம் சகோதரர்கள் குடிநீர் பற்றாக்குறையினால் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சியானது பரந்த பகுதிகளை தரிசாக மாற்றி சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், நீர்வளங்களை தன்னிச்சையாக நிர்வகித்தல், அவற்றின் சிதைவு, மாசுபாடு ஆகியவை குறிப்பாக ஏழைகளுக்கு தீங்கு விளைவிப்பதோடு, நாம் உடனடியாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
"பாதுகாப்பான குடிநீர் ஓர் அடிப்படை மற்றும் உலகளாவிய மனித உரிமை, ஏனெனில் இது மக்களின் உயிர்வாழ்வை தீர்மானிக்கிறது என்றும், துயரமும் ஊக்கமின்மையும் ஓய்வின்றித் தொடர்ந்து நடைபெறும் வேளையில் இந்த உலக உணவு நாள் கொண்டாடப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நீரை வாழ்வின் ஆதாரமாக மாற்றுவதற்காக அனைவரின் முன்னேற்றத்துக்கும் பயன்படக்கூடிய பெரும் நிதி ஆதாரங்களும், புதுமையான தொழில்நுட்பங்களும் ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை நோக்கித் திருப்பி விடப்படுகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் உரையாடலை ஊக்குவிப்பவர்களாகவும், அமைதியின் சிற்பிகளாகவும் மாறுவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அன்பு, மரியாதை மற்றும் இணக்கம் கொண்ட ஒரு நாகரீகத்தை உருவாக்கும் மதிப்புகளை விதைப்பதில் திருஅவை ஒருபோதும் சோர்வடையாது, அதன் படிகளை வழிநடத்த ஒரு திசைகாட்டியாக உதவுகின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக பசி மற்றும் தாகத்தால் அவதிப்படும் சகோதரர்களின் வளர்ச்சிக்காக செயல்படவும் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்