கடவுள் தரும் விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ள நாம்...

கடவுளுக்கு நம் வாழ்வில் இடமளிப்பது நம்மை விடுவிக்கிறது, நம் இதயங்களை குணப்படுத்துகிறது மற்றும் நமக்குள் அமைதியை அதிகரிக்கிறது

மெரினா ராஜ் - வத்திக்கான்  

இறைவன் நம்மை அவருடனும் ஒருவர் மற்றொருவருடனும் தொடர்புகொள்ளும்படி அழைக்கிறார். அவருடைய அழைப்பை நாம் ஏற்கவோ அல்லது ஏற்காமலோ இருக்க நம்மை சுதந்திரமாக விட்டுவிடுகிறார் என்றும், கடவுள் தன்னை ஒருபோதும் திணிக்கவில்லை மாறாக நமது விருப்பத்தை முன்னிலைப்படுத்துகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 15 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய 22ஆயிரம் திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம்மோடு ஓர் உறவினை ஏற்படுத்த விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்கின்றார் என்றும் கூறினார்.

நாம் அனைவரும் கடவுளால் அழைக்கப்பட்ட விருந்தாளிகள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடவுளுக்கு அடிபணியவைக்கும் நிலைக்கு அல்ல, மாறாக கடவுளோடு நாம் கொள்ளவேண்டிய உறவை முன்னிலைப்படுத்துகின்றார் என்றும் அதை ஏற்றல், ஏற்காமல் இருத்தல் என்னும் இரண்டு நிலையைத் தேர்ந்துகொள்ளும் நம் சுதந்திரத்தை மதிக்கின்றார் என்றும் கூறினார்.

கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நேரம்

திருப்பலியில் பங்கேற்றல், இறைவார்த்தைகளைக் கேட்டல், பலவீனமானவர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவுதல், துன்பப்படுபவர்களுக்கு ஆறுதல் அளித்தல் போன்றவற்றில் நாம் கடவுளுக்கான நேரத்தை அளிக்கலாம் என்றும் இத்தகையக் கடவுளின் நேரம் நம்மை தீமை, தனிமை மற்றும் உணர்வற்ற நிலையிலிருந்துக் காப்பாற்றுகிறது என்றும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

யாரையும் வற்புறுத்தாமல், தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தன் மகனுக்காகத் திருமண விருந்து தயாரித்து, ஒருவர் மற்றவரைச் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தி, ஒன்றிணைந்து விருந்து கொண்டாட ஒரு சந்தர்ப்பத்தை தாராளமாக அளித்து, தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள அனைவரையும் அழைத்த அரசனைப் போன்றவர் கடவுள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதனின் சுதந்திரத்தை மதிக்கும் கடவுள்

நம்மையன்றி நம்மைப் படைத்த கடவுளால் கூட நம்மைக் காப்பாற்ற முடியாது என்ற புனித அகுஸ்தினாரின் வார்த்தைகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எல்லாம் வல்ல இறைவன் நமது சுதந்திரத்தை முழுமையாக மதிக்கின்றார் என்றும் நமது பாவத்தளைகளிலிருந்து நம்மை விடுவிக்கும் நேரத்தைக் கண்டறிதல், கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கான நேரத்தைக் கண்டறிதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வலியுறுத்தினார்.

விருந்திற்கு அழைக்கப்பட்ட சிலர் தங்களது சொந்த வேலைகளைக் காரணம் காட்டி விருந்திற்கு வர மறுத்ததை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நம்முடைய சொந்த விடயங்களைப் பற்றியே சிந்திப்பதில் மும்முரமாக இருப்பதால், எத்தனை முறை நாம் கடவுளின் அழைப்பைக் கவனிக்காமல் இருக்கிறோம் என்பதனைச் சிந்தித்துப் பார்க்கவும் திருப்பயணிகளுக்கு அழைப்புவிடுத்தார்.

நம்முடைய சொந்த ஓய்வு நேரத்தைக் கண்டுபிடிக்க நேரம் ஒதுக்கும் நாம் நமது பாவத்தளைகளிலிருந்து நம்மை விடுவிப்பதற்கான நேரத்தைக் கண்டுபிடிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் இத்தகைய நேரத்தைக் கண்டறியவே இயேசு நம்மை அழைக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.

கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கான நேரம்,  நம் இதயங்களை ஒளிரச் செய்து குணப்படுத்துகிறது,  நமக்குள் அமைதி,  நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது, தீமை, தனிமை மற்றும் பொருள் இழப்பு ஆகியவற்றிலிருந்து அது நம்மைக் காப்பாற்றுகிறது என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது மதிப்புக்குரியது, ஏனென்றால் இறைவனுடன் இருப்பது அவருக்கு நம் வாழ்வில் இடம் கொடுப்பது நல்லது என்றும் எடுத்துரைத்தார்.

கடவுளுக்கு நாம் கொடுக்கும் இடம்

நலிந்தோர் மற்றும் ஏழைகளுக்கு உதவுவதல்,  தனிமையில் இருப்பவர்களுடன் பழகுதல்,  செவிமடுத்தல், செபம் மற்றும் தொண்டுப்பணிகள் வழியாக நாம் கடவுளுக்கு இடமளிக்க முடியும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  துன்பப்படுபவர்களுக்கு ஆறுதல் கூறுவதன் வழியாக நாம் கடவுளின் கவனத்தை ஈர்த்து இறைவனுடன் இருக்கிறோம் என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2023, 13:46