புனிதத்துவம் என்பது ஒரு கொடை மற்றும் பயணம்!

புனிதர்களின் வாழ்க்கையில் நாம் ஓர் எடுத்துகாட்டைப் பார்க்கின்றோம், அவர்களின் இறைவேண்டல்களில் நாம் உதவியைப் பெறுகிறோம், அவர்களுடன் தொடர்புகொள்வதில் நாம் சகோதர அன்பின் பிணைப்பில் ஒன்றாகப் பிணைக்கப்படுகிறோம் : திருத்தத்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம்

புனிதத்துவம் என்பது ஒரு கொடை மற்றும் பயணம் என்றும், புனிதர்களின் வாழ்க்கையை நாம் அறிந்து கொள்வதும், அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்க்கையைக் கண்டு நெகிழ்வதும் நல்லது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 1, இப்புதனன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவை முன்னிட்டு தான் வழங்கிய சிறப்பு மூவேளை செப உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, நமது அன்றாட செபத்தில் புனிதர்களை நினைவு கூர்வது நமக்கு பெரியதொரு நன்மையைத் தருகின்றது என்றும் தெரிவித்தார்.

புனிதத்துவம் என்பது ஒரு கொடை

புனிதத்துவம் என்பது கடவுளிடமிருந்து திருமுழுக்கின் வழியாக நாம் பெற்றுக்கொண்ட கொடை என்றும்,  அதனை நாம் நம்மில் வளர அனுமதிக்கும்போது, அது நம் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிடும் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

மேலும் புனிதர்கள் என்பவர்கள் அணுக முடியாத அல்லது தொலைதூர கதாநாயகர்கள் அல்ல, ஆனால், அவர்கள் அனைவரும் நம்மைப் போன்றவர்கள், நமது நண்பர்கள், நாம் பெற்றுக்கொண்டுள்ள அதே கொடையின் தொடக்கப் புள்ளியாக அமைபவர்கள் என்றும் உரைத்தார் திருத்தந்தை.

புனிதர்கள், தாராள மனம் கொண்டவர்கள், கடவுளின் உதவியால், தாங்கள் பெற்ற வரத்தின்படி வாழ்ந்து, தூய ஆவியாரின் செயலால் நாளுக்கு நாள் தங்களை மாற்றிக் கொள்ள அனுமதித்தவர்கள் என்றும், உண்மையில் நாம் அவர்களைச் சந்தித்திருக்கலாம், அவர்கள் நம் கதவுகளுக்கு அருகில் கூட இருந்திருக்கலாம் என்றும் விளக்கினார் திருத்தந்தை.

மேலும் புனிதத்துவம் என்பது மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக அனைவருக்கும் வழங்கப்படும் ஒரு கொடை என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் ஒரு கொடையை பெறும்போது,  நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், ஏனென்றால் யாரோ ஒருவர் நம்மை அன்புகூர்கிறார் என அர்த்தம் என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, 'மகிழ்ச்சியானவர்', 'ஆசீர்வதிக்கப்பட்டவர்' என்ற வார்த்தைகளை இன்றைய நற்செய்தியில் இயேசு மீண்டும் மீண்டும் கூறுகின்றார் என்றும் நினைவுபடுத்தினார்.

இருப்பினும், கடவுளிடமிருந்து வரும் ஒவ்வொரு கொடையும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும், ஏனென்றால், அது ஒரு பதிலின் பொறுப்பையும் அக்கொடை வீணடிக்கப்படாமலிருக்கத் தன்னை அர்ப்பணிப்பதற்கான அழைப்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை

புனிதத்துவம் என்பது ஒரு பயணம்

இரண்டாவதாக, புனிதத்துவம் என்பது ஒரு பயணம், இது ஒன்றாகச் செய்ய வேண்டிய பயணம் என்றும், ஒருவருக்கொருவர் உதவி செய்து, புனிதர்களான அந்தச் சிறந்த தோழர்களுடன் நாம் ஒன்றுபட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார் திருத்தந்தை

புனிதர்கள் என்பவர்கள் நமது மூத்த சகோதரர் சகோதரிகள், அவர்களை நாம் எப்போதும் நம்பலாம், அவர்கள் நம்மை ஆதரிக்கின்றனர், நமது வாழ்வின் பயணத்தில் நாம் தவறான திருப்பத்தை தெரிவு செய்யும்போது, ​​அவர்கள் நம்மைத் திருத்தி நமக்கு நல்வழி காட்டுகின்றனர் என்றும் விளக்கிய திருத்தந்தை, அவர்கள் நமது உண்மையான நண்பர்கள், அவர்களை நாம் நம்பலாம், ஏனென்றால் அவர்கள் நம் நல்வாழ்வை விரும்புகிறார்கள்; அவர்கள் நம் குறைகளைச் சுட்டுவதும் இல்லை, ஒருபோதும் நம்மைக் காட்டிக் கொடுப்பதில்லை என்றும் விவரித்தார்.

புனிதர்களின் வாழ்க்கையில் நாம் ஓர் எடுத்துகாட்டைப் பார்க்கின்றோம், அவர்களின் இறைவேண்டல்களில் நாம் உதவியைப் பெறுகிறோம், அவர்களுடன் தொடர்புகொள்வதில் நாம் சகோதர அன்பின் பிணைப்பில் ஒன்றாகப் பிணைக்கப்படுகிறோம் என்றும், இதைத்தான் புனிதர்களுக்கான இன்றைய  தொடக்கவுரையும் எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2023, 14:54