மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்துப் போராட்டம் மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்துப் போராட்டம்   (AFP or licensors)

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாப்போம்!

ஒரு பெண்ணின் இதயத்திலிருந்தும் சதையிலிருந்தும் உலகிற்கு மீட்பு வந்தது; பெண்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதிலிருந்தே, அவர்களின் எல்லா பரிமாணங்களிலும், நமது மனிதநேயம் வெளிப்படுகிறது: திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உண்மையில், பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது நம் சமூகத்தை ஆட்டிப்படைக்கும் ஒரு நஞ்சுக் களையாகும், இது வேரிலேயே களையப்பட வேண்டும் என்றும், இந்த வேர்கள் கலாச்சார மற்றும் மனரீதியானவை மற்றும் காழ்ப்புணர்வு, தன்வசமாக்கிக்கொள்ளுதல், அநீதி ஆகியவற்றின் மண்ணில்  வளரக்கூடியவை என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 9, இவ்வியாழனன்று Radio1Rai & Cadmi D.I.Re ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த பெண்களுக்கு எதிரான வன்முறைக் குறித்த தேசிய பொதுப்பரப்புரைக்காக வழங்கிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்களின் மாண்பு எப்போதும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பல இடங்களிலும் சூழ்நிலைகளிலும் பெண்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர், அவர்கள் பொருட்களைப் போல தாழ்வுக்குரியவர்களாகக்  கருதப்படுகிறார்கள் என்று தனது வருத்தத்தை பதிவு செய்துள்ள திருத்தந்தை, ஒரு பெண் ஒரு பொருளைப் போன்று நடத்தப்படும்போது, அவருடைய மாண்பு காக்கப்படாது, அவர் வெறும் சொத்தாக மட்டுமே மதிக்கப்படுவார் என்றும், இதனால் அவர் அடக்கியாளப்படும் நிலைக்குத் தள்ளப்படுவார் என்றும் விளக்கியுள்ளார்.

வன்முறையின் தாக்கத்தாலும், வேதனையாலும் எத்தனை பெண்கள் துயருறுகிறார்கள்! எத்தனை பேர் தவறாக நடத்தப்படுகிறார்கள், முறைகேட்டிற்கு ஆளாகிறார்கள், அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இவர்கள் அனைவரும் மனிதர்களின் பேராசைக்கு அடிபணிய வேண்டிய கட்டாயத்தில் தங்கள் உடலையும் வாழ்க்கையையும் அப்புறப்படுத்தலாம் என்று நினைப்பவர்களின் ஆணவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் விவரித்துள்ளார்.

இதில் விடயத்தில் மக்கள் தொடர்பு சாதனங்கள் இன்னும் தெளிவற்ற நிலையில் இருக்கின்றன என்றும், ஒருபுறம், அவைகள் மரியாதை மற்றும் பெண்களை மேம்படுத்துவதை விரும்புகின்றன; ஆனால் மறுபுறம், அவைகள் பெண்களின் இன்பநாட்டம் மற்றும் நுகர்வுவாதத்தால் குறிக்கப்பட்ட செய்திகளைத் தொடர்ந்து தெரிவிக்கின்றன என்றும் தனது கவலையை வெளிப்படுத்திய திருத்தந்தை,  இதனால் ஆண் பெண் ஆகிய இருபாலரும், இவற்றின் மாதிரிகைகளான வெற்றி, தன் உறுதிப்பாடு, போட்டி, மற்றவர்களை ஈர்க்கும் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் வலிமை ஆகியவற்றின் அளவுகோல்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.  

ஆண்டவர் இயேசு நாம் சுதந்திரமாகவும் முழு மனித மாண்புடனும் வாழ விரும்புகிறார்! பெண்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியான முறைகேடுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், நாம் ஒருவருக்கொருவர் மரியாதை மற்றும் அங்கீகாரத்தின் அடிப்படையில் நியாயமான மற்றும் சமநிலையான உறவுகளின் வடிவங்களை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

முறைகேடு, சுரண்டல், ஓரங்கட்டப்படுதல் மற்றும் தேவையற்ற அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட பெண்களாகிய குரலற்ற நமது சகோதரிகளுக்காக நாம் குரல் கொடுக்கவேண்டியது நமது கடமை, அனைவரின் பொறுப்பு என்றும், இந்தக் காரியத்தில் நாம் அலட்சியமாக இருக்க வேண்டாம்! நாம் இப்போதே, அனைத்து நிலைகளிலும், உறுதியுடனும், துணிவுடனும், விரைவாகவும், செயல்பட வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2023, 14:23