குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறையவே உள்ளன
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
குழந்தைகள் கொண்டிருக்கும் உள்மன அமைதி, மற்றும் அவர்கள் குறித்து நிற்கும் ஒன்றிப்பு ஆகியவைகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
84 நாடுகளைச் சேர்ந்த 7500 குழந்தைகளை நவம்பர் 6ஆம் தேதி திங்களன்று மாலை வத்திக்கான் புனித 6ஆம் பவுல் அரங்கில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மகிழ்வு மற்றும் மாசற்றதன்மையை குழந்தைகள் நமக்கு கற்றுத் தருகிறார்கள், அவர்களிடமிருந்து கர்றுக்கொள்ள நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்வோம் என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் உரையாற்றிய திருத்தந்தை, கற்றுக்கொள்ள வேண்டியவர்களாக குழந்தைகள் இருக்கும்போது அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்ற கேள்வியுடன் துவக்கி, அவர்கள் தொடர்ந்து இவ்வுலகிற்கு விலைமதிப்பற்றப் பாடங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என அவரே விடையும் அளித்தார்.
வாழ்வின் அழகுக்கு உடலுருவாய் இருக்கும் குழந்தைகள், ஒன்றாய் இருப்பதன் மகிழ்ச்சியையும் நமக்குக் கற்றுத் தருகிறார்கள் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் குழந்தைகளைச் சந்திக்கும்போதெல்லாம் அவர்களிடமிருந்து புதியனவைகளை கற்றுக்கொள்வதாகவும் எடுத்துரைத்தார்.
உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் நவம்பர் 6ஆம் தேதியின் கூட்டத்திற்கு வந்துள்ள சிறுவர் சிறுமியர், இயேசு நமக்கு வழங்கியுள்ள பெரிய வீட்டில் தங்கள் உடன்பிறப்புக்களுடனான மறுசந்திப்புக்கு வந்துள்ளனர் எனவும் கூறினார் திருத்தந்தை.
குழந்தைகள் எப்போதும் வரவேற்கப்படுகிறார்கள், அன்புகூரப்படுகிறார்கள், மற்றும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டும்படியான ஒரு சூழலை உருவாக்க வேண்டிய நம் கடமையையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போராலும், பசியாலும், நோயாலும், காலநிலை மாற்ற பேரிடர்களாலும், ஏழ்மையாலும் துன்புறும் குழந்தைகளுடன் தன் நெருக்கத்தையும் வெளிப்படுத்தினார்.
வாழ்வு என்பது ஓர் அழகிய கொடை என்பதையும், கடவுள் குழந்தைகளை மிகவும் அன்புகூர்கிறார் என்பதையும், ஒன்றித்திருப்பதும், ஒருவருக்கொருவர் எடுத்துரைப்பதும், பகிர்வதும், தராளமாக வழங்க இயல்வதும் ஒரு வியத்தகு அனுபவம் என்பதை எப்போதும் நினைவுகூருங்கள் என மேலும் குழந்தைகளை கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வுரையின் இறுதியில் குழந்தைகளை நோக்கி, தன்னிடம் அவர்களின் கேள்விகளை முன்வைக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொள்ள, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் உலகில் நன்மைகளை ஆற்றுதல் உட்பட பல்வேறு கேள்விகள் திருத்தந்தையிடம் முன்வைக்கப்பட்டன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்