திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

பாலஸ்தீன அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய திருத்தந்தை

நவம்பர் 2 பிற்பகலில் பாலஸ்தீன அதிபர் மகமுத் அப்பாஸ் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமைதிக்கான அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

திருத்தந்தை மற்றும் பாலஸ்தீன அதிபர் மகமுத் அப்பாஸ் நவம்பர் 2ஆம் தேதி பிற்பகலில் தொலைபேசியில் உரையாடியதை வத்திக்கான் பத்திரிகை அலுவலகத்தின் இயக்குனர் மத்தேயு ப்ருனி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொலைபேசி அழைப்பின் போது  உலகில் அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் திருத்தந்தை பிரான்சிஸின் பங்கு மற்றும் முயற்சிகளுக்கு பாலஸ்தீன அதிபர் மகமுத் தனது பாராட்டுகளைத் தெரிவித்ததாகவும், உடனடி போர்நிறுத்தத்தை உறுதி செய்வதற்குரிய முயற்சிகளை வத்திக்கான் தொடர்கிறது என்பதையும் பாலஸ்தீனிய அமைப்பு வாபா தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி இடம்பெற்ற மோதலின் தொடக்கத்திலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்கான தனது வேண்டுகோளை விடுத்து, போர் நிறுத்தத்தின் அவசியத்தை உறுதிப்படுத்தியுள்ளதோடு, ஹமாஸின் கைகளில் உள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்படவும், மக்களுக்கு நேரடி மனிதாபிமான உதவிகள் சரியான நேரத்தில் அனுப்பப்படவும், காசாவில் உள்ள திருஅவையுடன் ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டிருக்கிறார்.

அக்டோபர் 22 மற்றும் 26 தேதிகளில், அமெரிக்க அரசுத்தலைவர் ஜோ பைடன் மற்றும் துருக்கி அரசுத்தலைவர் ரெசெப் தையிப் எர்டோகனுடன் தொலைபேசி உரையாடல்களில் அமைதியின் அவசியத்தை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 November 2023, 14:50