ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

உடனிருப்பு, இரக்கம் மற்றும் மென்மையுள்ளவர்களாக வாழ்வோம்

நலவாழ்வுப் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் மருத்துவர்கள் நாட்டின் முதுகெலும்பு போல திகழ்கின்றார்கள்

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடவுளின் மூன்று பண்பு நலன்களான உடனிருப்பு, இரக்கம் மற்றும் மென்மை நம்மை முன்னேற்ற உதவுகின்றன என்றும், நலவாழ்விற்கான காப்பாளர்களாக இருக்கும் நாம் ஆன்மிக, உடல் மற்றும் உள்ள நலவாழ்வுக்கான அணுகுமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 18 சனிக்கிழமை வத்திக்கானின் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் இத்தாலிய குழந்தை நல மருத்துவர்களின் கூட்டமைப்பினர் (FIMP) மற்றும் காதுப்பிரிவு மருத்துவர்களின் கூட்டமைப்பினர் (AOOI); ஏறக்குறைய 2000 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் தரும் ஆசீராகிய குழந்தைகள் வளரும் பருவத்தில் அவர்களுக்கு உதவும் இளம்பெற்றோர்களுடன் பயணிப்பவர்களாக, வழிகாட்டுபவர்களாக, குழந்தைநல மருத்துவர்கள் இருக்கின்றார்கள் என்றும், உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர் என்ற திருப்பாடல் (திபா 128.3) வரிகளுக்கு ஏற்ப, குழந்தைகள் விளங்குகின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதற்கு பதிலாக செல்லப் பிராணிகளை வளர்க்கும் காலகட்டத்தில் இத்தாலி மாறிக்கொண்டிருக்கின்றது என்றும், இத்தகைய முதுமையடையாமல் இளமைத்துடிப்புடன் இத்தாலி இருக்க, இளையோர் நம்பிக்கை மற்றும் துணிவு கொண்டு, பெற்றோராக மாறுவதற்கான துணிவையும் மகிழ்வையும் மீண்டும் கண்டிபிடிக்க வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

(ENT) காது மூக்கு தொண்டைப் பிரிவு மருத்துவர்கள், உறவுகளுக்குத் தேவையான உடல் உறுப்புக்களை குணப்படுத்தி, மற்றவர்களுடனும், சமூகத்துடனும் நல்ல உறவு கொள்ள உதவுகின்றார்கள் என்றும், தனிமை மற்றும் வெறுமையில் வாழ்ந்த காதுகேளாத வாய் பேச இயலாதவர்களிடத்தில் உறவை ஏற்படுத்திக் கொள்ள இயேசு பயன்படுத்திய சைகைகளும் வார்த்தைகளும் மருத்துவர்களாகிய அவர்களுக்கு உதவும் என்றும் கூறினார் திருத்தந்தை.

உறவுகளுடனான பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தங்களால் பாதிக்கப்படும் மக்களிடம் நாம் பயன்படுத்தும் சைகைகள் மற்றும் வார்த்தைகளில் கடவுளின் இரக்கம் மற்றும் மென்மை ஒளி வீசுகின்றன என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நலவாழ்வுப் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் மருத்துவர்கள் நாட்டின் முதுகெலும்பு போல திகழ்கின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார்.  

நலவாழ்வுப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சேவை மனப்பான்மை இல்லையென்றால் தொற்று நோயின் தாக்கத்தினால் இன்னும் பல உயிர்களை நாம் இழந்திருக்க வேண்டிய சூழல் இருந்திருக்கும் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கடவுளின் நெருக்கம், இரக்கம் மற்றும் மென்மை பண்புகள் கொண்டு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 November 2023, 13:06