சட்டத்தின் அதிகாரம் செயல்படுவதற்கு நீதி இன்றியமையாதது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
IDLO எனப்படும் வளர்ச்சிக்கான அனைத்துலகச் சட்ட நிறுவனம் துவக்கப்பட்டதன் நாற்பதாம் ஆண்டையொட்டியக் கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
IDLO நிறுவனத்தின் உயர் இயக்குனர் தனக்கு அனுப்பியிருந்த அழைப்பிற்கு முதலில் நன்றி கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கூட்டத்தில் எடுக்கப்பட உள்ள தீர்மானங்கள், மக்களிடையேயான இணைப்பைப் பலப்படுத்தவும், நம் பொதுவான இல்லத்தை பாதுகாக்கவும், மாண்பு மீறப்படுபவர்களின் உரிமைகளை பாதுகாத்திடவும் உதவ வேண்டும் என வேண்டுவதாகவும் தன் செய்தியில் கூறியுள்ளார்.
கடந்த நாற்பது ஆண்டுகளாக சட்டத்தின் ஆட்சியை ஊக்குவித்து அதன் வழியாக அமைதியையும் நிலையான வளர்ச்சியையும், அனைவருக்குமான நீதியையும் நிலைநிறுத்தி அரசுகளுக்கிடையேயான இந்த நிறுவனம் சேவையாற்றி வந்துள்ளதையும் பாராட்டியுள்ளார் திருத்தந்தை.
சமூக இணக்க வாழ்வைப் பெறுவதற்கும், உலக அளவிலான உடன்பிறந்த உணர்வை உருவாக்குவதற்கும், நீதி அத்தியாவசியமானது என்பது மட்டுமல்ல, எந்த மோதலுக்கும் அமைதியான தீர்வைக் காணவல்ல உலகைக் கட்டியெழுப்புவதற்கும், சட்டத்தின் அதிகாரம் செயல்படுவதற்கும் அது இன்றியமையாதது என தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்றைய உலகில் மோதல்களின் அதிகரிப்பு, காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகள், இலஞ்ச ஊழல், சரிநிகரற்ற தன்மைகள் ஆகியவைக் குறித்தும் தன் கவலையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.
அரசியல் ஆதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நீதியின் ஆட்சி, அதாவது சட்டத்தின் ஆட்சி இடம்பெறவேண்டும் என்ற விண்ணப்பமும் திருத்தந்தையால் விடப்பட்டுள்ளது.
நீதியும் அமைதியும் இன்றி, நாம் எதிர்நோக்கும் எந்த ஒரு சவாலுக்கும் தீர்வு காணமுடியாது என அச்செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கால நிலை மாற்றம் தொடர்புடையவைகளில் IDLO நிறுவனம் எடுத்துவரும் நீதியான நடவடிக்கைகளைப் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்