மாடத்திலிருந்து தனது இறைவேண்டல் குறித்து அறிவிக்கும் திருத்தந்தை மாடத்திலிருந்து தனது இறைவேண்டல் குறித்து அறிவிக்கும் திருத்தந்தை   (ANSA)

போரால் பாதிக்கப்பட்டவர்களை நாம் மறந்துவிடக் கூடாது!

போரால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளுக்காகவும் இறந்த நம்பிக்கையாளர்கள் தினத்தன்று இறைவேண்டல் செய்வோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசா, உக்ரைன் மற்றும் பிற இடங்களில் தொடர்ந்து போர்கள் நிகழ்ந்து வரும் வேளை,  உரோமையுள்ள போர் வீரர்களின் கல்லறையில் திருப்பலி நிறைவேற்றி இறைவேண்டல் செய்யவிருப்பதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 1, இப்புதனன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாட்டுத் திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரைக்குப் பின்பு இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.

நாளை மதியம் (நவம்பர் 2, வியாழன்) நான் உரோமை நகரிலுள்ள போர் வீரர்களின் கல்லறையில் திருப்பலிக் கொண்டாடுவேன் என்று திருப்பயணிகளிடம் கூறிய திருத்தந்தை,  இன்றைய போர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் தொடர்ந்து இறைவேண்டல் செய்வோம் என்றும் கூறினார்.

போரால் சிதைக்கப்பட்டுள்ள உக்ரைனை நாம் மறந்து விடக்கூடாது, பாலஸ்தீனத்தையும் இஸ்ரயேலையும் மறக்காதிருப்போம் என்றும் இன்னும் போர் நீடிக்கும் பல பகுதிகளை நாம் மறந்து விடக்கூடாது என்றும் திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

கடந்த காலங்களில், ஏமன், சிரியா மற்றும் பிற இடங்களில் நடந்த மறக்கப்பட்ட மோதல்களைப் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல ஆண்டுகளாக மறக்கப்பட்ட மற்றும் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளைக் குறித்தும் பேசியதுடன், இப்போர்கள் மக்கள் பலரை கொன்றழித்துள்ளது என்றும் இன்னும் பலரை குறிப்பாக குழந்தைகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் வேதனை தெரிவித்தார்.

இறந்த நம்பிக்கையாளர்கள் தினத்தின்போது ஒரு கல்லறையில் திருப்பலி நிறைவேற்ற திருத்தந்தை விரும்புவது இது முதல் முறையல்ல. 2018-இல், உரோமையின் பிரெஞ்சு இராணுவ கல்லறையிலும், 2021-இல் Laurentino கல்லறையிலும் அவர் திருப்பலி நிறைவேற்றி இறைவேண்டல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2023, 13:38