நோத்ரே தேம் பள்ளி அருள்சகோதரியுடன் திருத்தந்தை பிரான்சிஸ் நோத்ரே தேம் பள்ளி அருள்சகோதரியுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

சகோதர சகோதரிகளுக்கு செவிசாய்த்தல் கடவுளுக்கு செவிசாய்த்தலாகும்

அர்ப்பண வாழ்வானது கடவுள் அவர்களுக்குக் கொடுத்த கொடையின் அடையாளம் மட்டுமல்ல உடன் வாழும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணியாற்றும் அவர்கள் விருப்பத்தின் அடையாளம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

அருளாளர் Gerhardinger இயேசுவின் தெரசா அவர்களின் வாழ்வைப் பின்பற்றி கல்வி ஆன்மிகம், பணி ஆகிய மூன்று வழிகளிலும் தொடர்ந்து அருள்சகோதரிகள் பணியாற்ற வேண்டும் என்றும், உடன் வாழும் சகோதர சகோதரிகளுக்கு செவிசாய்ப்பது என்பது கடவுளுக்கு செவிசாய்ப்பது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 13 திங்கள் கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் நோட்ரே தெம் பள்ளி அருள்சகோதரிகளின் 25 வது பொதுப்பேரவையை முன்னிட்டு அதன் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 50 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

துறவறத்தின் அடிப்படை ஏழ்மை

ஏழ்மை இல்லாமல் துறவற வாழ்க்கை இல்லை, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையைப் பாதுகாப்பது ஏழ்மையே என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதுவே துறவற வாழ்வின் அடித்தளம் என்பதை ஒரு போதும் மறந்து விடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இத்தகைய ஏழ்மைப் பண்பே நோத்ரே தேம் சபை அருள்சகோதரிகள் உலகம் முழுவதும் கடவுளின் நற்செய்தியை எடுத்துரைக்கவும், கிறிஸ்துவைப் பிறருக்கு வெளிப்படுத்தவும், நம்பிக்கை, எதிர்நோக்கு, மற்றும் பணியால் நிறைத்து, வாழ வழிவகை செய்திருக்கின்றது என்றும் கூறினார்.

சபையின் 25ஆவது பேரவையானது "உலகளாவிய ஒன்றிப்பிற்கு இறைவாக்கினர்களாக சான்றுபகர்தல்“ என்ற தலைப்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இத்தலைப்பு இக்கால சூழலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அருள்சகோதரிகளின் அர்ப்பண வாழ்வானது கடவுள் அவர்களுக்குக் கொடுத்த கொடையின் அடையாளம் மட்டுமல்ல உடன் வாழும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணியாற்றும் அவர்கள் விருப்பத்தின் அடையாளம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

செவிசாய்க்கக் கற்றுக்கொள்வது

செவிசாய்க்கக் கற்றுக்கொள்வது என்பது மிகவும் கடினம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இறைவன் பிறர் வழியாக நம்மிடம் பேசுகிறார் எனவே, மற்றவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்றும், நான் என்ன பதில் அளிப்பது என்ற சிந்தனையோடு செவிசாய்க்காமல் இதயத்திலிருந்து பதிலளிக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

உடன் வாழும் சகோதர சகோதரிகளுக்கு செவிசாய்ப்பது என்பது கடவுளுக்கு செவிசாய்ப்பது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், தூய ஆவியின் ஆற்றலால் நிரம்பப்பெற்று நாம் வாழும் சமூகங்களில் நமது வாழ்க்கையில் நல்ல பலன்களைத் தர செபிப்பதாகவும் அன்னை மரியின் துணையை நாடுவதாகவும் எடுத்துரைத்தார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2023, 15:26