நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி   (ANSA)

பலவீனமானவர்களாக, உதவியற்றவர்களாக உணரவைக்கும் நிலநடுக்கம்

2016 ஆகஸ்ட் 24 முதல் 2017 ஜனவரி வரை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் தங்கள் குடும்பங்கள், பணியாற்றும் இடங்கள், வீடுகள் கலை மற்றும் நினைவுச்சின்னங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நிலநடுக்கம் என்பது உடல் ரீதியாகவும் அறநெறி ரீதியாகவும் ஒரு பேரழிவு தரும் அனுபவம் என்றும், தலைமுறை தலைமுறையாக உழைத்து சேர்த்ததை மிகக் குறுகிய காலத்தில் வீழ்ச்சியடையச் செய்து மக்களை பலவீனமானவர்களாகவும் உதவியற்றவராகவும் உணர வைக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 24, வெள்ளிக்கிழமை  மத்திய இத்தாலியில் நில நடுக்கத்தால் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதி நிதிகளை சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2016 ஆகஸ்ட் 24 முதல் 2017 ஜனவரி வரை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் தங்கள் குடும்பங்கள், பணியாற்றும் இடங்கள், வீடுகள்  கலை மற்றும் நினைவுச்சின்னங்களை இழந்து மரணத்தையும் அழிவையும் விதைத்த பூகம்பத்தின் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்  எடுத்துரைத்தார் திருத்தந்தை.

நிலைத்தத்தன்மை, இயற்கை மற்றும் தற்போதைய காலநிலை மாற்றங்கள் என்னும் மூன்று கருத்துக்கள் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நிலநடுக்கத்திற்குப் பின் செய்யப்படும் புனரமைப்புக்கான பாதை நீண்டது, நிச்சயமாக எளிதானது அல்ல என்று எடுத்துரைத்து, அம்மக்கள் எதிர்கொள்ளும் மனப்பான்மை நல்லது தூய ஆவியால் தீர்மானிக்கப்பட்டது என்றும் கூறினார்.

நிலைத்தத் தன்மையில் கவனம்

நாம் வாழும் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்கான சவாலானது நிலையான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான தேடலை உள்ளடக்கியது என்றும், இக்கண்ணோட்டத்தில், போதுமான நிலைத்தத்தன்மைக்கான அளவுகோல்களை ஏற்றுக்கொள்வது நீதி மற்றும் தொண்டுக்கான ஒரு முக்கியமான செயல் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

கழிவுகளை அகற்றுதல், வளங்களை மதிப்பாய்வு செய்தல், நியாயமான வர்த்தகம், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்பு, கட்டடக்கலை தடைகளை நீக்குதல் ஆகியவற்றில் புனரமைப்பு பணிகள் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய தேவைகள் தனிப்பட்ட, சமூகம் ஆகிய இரண்டையும் நல்ல வாழ்க்கைத் தரத்துடன் ஒருங்கிணைக்கிறது என்றும் கூறினார்.

இயற்கையில் கவனம்

கடவுளின் படைப்பு மற்றும் மனித உருவாக்கம் ஆகிய இரண்டிற்கும் இடையிலான நல்லிணக்கத்தின் முன்மாதிரிகையாக இயற்கை விளங்குகின்றது என்றும், சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தவும், அதன் அழகு மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

பிறரோடு பகிரப்படும் வாழ்க்கை, கலாச்சாரம், நம்மைச் சுற்றியுள்ளவற்றிற்கான மரியாதை ஆகியவற்றை மேம்படுத்துதல், கடவுள் நமக்கு கொடுத்த பணியினைச் சிறப்பாகச் செய்யும் பாதுகாவலர்களாக நம்மை  மாற்றுகின்றது என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், இயற்கை இறைவன் நமக்கு அளித்த கொடை என்றும் கூறினார்.

சுற்றுச்சூழலை சிதைக்காத மாசுபடுத்தாத கட்டிடங்கள், நீர் மேலாண்மை, கழிவுகளைப் பிரித்தல், மரங்களை நடுதல் போன்றவை தாராளமான மற்றும் மாண்புள்ள படைப்பாற்றலின் ஒரு பகுதி என்றும், கடந்த கால தவறுகளை சரி செய்து எதிர்கால வாழ்விற்கான வளர்ச்சித்திட்டங்களை ஊக்குவிக்கவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

காலநிலை மாற்றத்தில் கவனம்

உள்ளூர் நிலையிலும் உலகளாவிய நிலையிலும், சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க நடவடிக்கை எடுத்தல், காடுகள், ஆறுகள் மற்றும் ஓடைகளை சுத்தம் செய்வதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்தல் போன்றாவற்றை வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், விவசாயத் துறையில் புதிய வகை பயிர்கள் மற்றும் கால்நடை இனங்களை அறிமுகப்படுத்துவது அவசியம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2023, 14:34