C9  கர்தினால்கள் ஆலோசனை அவை C9 கர்தினால்கள் ஆலோசனை அவை 

திருஅவையில் பெண்களின் பங்கு குறித்து C9 கர்தினால்கள் அவை

அகில உலக திருஅவையின் நிர்வாகத்தில் உதவ, 2013ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உருவாக்கப்பட்டது C9 என்ற கர்தினால்கள் ஆலோசனை அவை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வத்திக்கானிலுள்ள திருத்தந்தையின் சாந்தா மார்த்தா இல்லத்தில் நடைபெற்று வரும் கர்தினால்கள் உயர்மட்ட ஆலோசனை அவைக் கூட்டத்தில் முதன்முறையாக 'திருஅவையில் பெண்களின் பங்கு' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ந்ததாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

இந்த உரையாடல் இறையியலாளர்களான அருள்சகோதரி Linda Pocher, முனைவர்  Lucia Vantini மற்றும் அருள்பணியாளர் Luca Castiglioni ஆகியோரின் உள்ளொளி பகிர்வுகளுடன் நிகழ்ந்தது என்றும், இவர்கள் அனைவரும் இத்தாலிய உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள்கப் பணியாற்றி வருகின்றனர் என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமர்வின் முடிவில்,  அனைத்திற்கும் மேலாக தனிப்பட்ட கிறிஸ்தவ சமூகங்களில், திருஅவையின் பெண்பால் அம்சத்திற்குச் செவிசாய்க்க வேண்டியதன் அவசியத்தை அவை ஒப்புக்கொண்டது எனவும், இதனால் பிரதிபலிப்பு மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகள் பெண்களின் ஈடுசெய்ய முடியாத பங்களிப்பிலிருந்து பயனடைய முடியும் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கைத் தெரிவிக்கின்றது.

மேலும் கர்தினால்கள்  உயர்மட்ட ஆலோசனை அவை, பல்வேறு மாநிலங்களின் அடிப்படையில் தற்போதைய உலக நிலைமையை ஆய்வு செய்வதில் நேரத்தை செலவிட்டது என்றும்,  அதேவேளையில், குறிப்பாக உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் மற்றும் புனித பூமியின் தீவிர சூழ்நிலை மற்றும் தற்போது துபாயில் நிகழ்ந்து வரும் COP28 எனப்படும் காலநிலை குறித்த உச்சிமாநாடு குறித்தும் விவாதித்ததாக அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அகில உலக கத்தோலிக்க திருஅவையின் நிர்வாகத்தில் உலகின் பல்வேறு பகுதிகளைக் கொண்ட கர்தினால்களைக் கொண்டு C9 உயர்மட்ட கர்ர்தினால்கள் அவையை 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி உருவாக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இதன் முதல் கூட்டம் அதே ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதி இடம்பெற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 December 2023, 15:03