இத்தாலிய விமானப்படையினரின் சாகசங்கள் இத்தாலிய விமானப்படையினரின் சாகசங்கள் 

அமைதிக்கான விலைமதிப்பற்ற பணியாக விமானப்படைப் பணி

ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய அனைத்தும் ஒருபோதும் அதிகார நலன்களுக்கோ அல்லது தீங்கு விளைவிக்கும் பயன்பாடுகளுக்கோ அடிபணியக்கூடாது

மெரினா ராஜ் – வத்திக்கான்

வானத்தைக் கடக்கவும், சிக்கலான சாதனைகளை முடிக்கவும் வேற்று கிரக விண்வெளியில் உள்ள இடங்களை அடையவும் விமானங்கள் உதவுகின்றன என்றும்,  பொதுவான நன்மையை நோக்கியப் பாதையில் அமைதிக்கான விலைமதிப்பற்ற பணியாக விமானப்படைகளின் பணி இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

டிசம்பர் 9 சனிக்கிழமை வத்திக்கான் சாந்தா கிளமெந்தினா அறையில் இத்தாலிய விமானப்படை நூறாவது ஆண்டை முன்னிட்டு அதன் பிரதிநிதிகள் ஏறக்குறைய 100 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அறிவியல் முன்னேற்றம்

இந்த நூறு ஆண்டுகளில் விமானப்படையின் அறிவியல் முன்னேற்றமானது மனித குலத்தின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது என்றும், சிக்கல்கள் ஆபத்துக்கள், மோசமான விமான விபத்துக்கள் இருந்த நிலையிலிருந்து மாறி, மிகுந்த முயற்சி மற்றும் உழைப்புடன் அதிநவீன விண்வெளி பொறியியல் அமைப்புகளுடன் வளர்ந்து சிறப்பு பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய அனைத்தும் ஒருபோதும் அதிகார நலன்களுக்கோ அல்லது தீங்கு விளைவிக்கும் பயன்பாடுகளுக்கோ அடிபணியக்கூடாது என்றும், மாறாக மனிதனின் ஒருங்கிணைந்த நன்மை, அனைத்து மக்களின் மேம்பாடு, சிறந்த நீதியை ஆகியவற்றை நோக்கியே எப்போது செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பொதுப்பணி

மனிதாபிமான, அமைதி மற்றும் ஆதரவுப் பணிகளுக்கான பன்னாட்டு அமைப்புகளுடன் ஒத்துழைப்பு, தீவிர இயற்கை பேரழிவுகள் நேரத்தில் குறைவான வசதிகள் கொண்ட நாடுகள் மற்றும் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு ஆதரவளித்தல், கோவிட்-19 தொற்றுநோய் காலகட்டத்தில் அவசரநிலை பங்களிப்பு போன்றவற்றைக் குறிப்பிட்டு அப்பிரதிநிதிகளை வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மக்களைப் பாதுகாத்தல், வரவேற்றல், உதவுதல், பணியாற்றுதல் போன்றவற்றில் பயிற்சி பெற்று, கலாச்சாரம், மனிதமாண்பு மற்றும் பாரம்பரியத்தின் மரபு ஆகியவற்றை மக்களுக்கு வழங்குகின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விமானப்படை பணியாளர்களாக ஆண்களும் பெண்களும் மிகுந்த ஆர்வம், அர்ப்பணிப்பு, துணிவு, உந்துதல் ஆகியவை கொண்டு பணியாற்றும் விமானப்படையினரை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், காங்கோவின் கிண்டு பகுதியில் கொல்லப்பட்ட இத்தாலியின் இராணுவ வீரர்கள் 13 பேரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காகவும் செபித்தார்.

மனிதாபிமானம்

மனிதகுலம் கொடூரமான மோதல்களால் வேதனைப்படும் இந்நேரத்தில், மனித செல்வத்தைப் பாதுகாப்பது, நீதி மற்றும் அமைதியின் பாதுகாப்பை நோக்கி அர்ப்பணிப்பது போன்றவற்றுடன் எப்போதும் விமானப்படைப் பணியாளர்களின் வாழ்க்கை செல்கின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள்,  அவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்காகவும் செபிப்பதாக எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2023, 10:52