வத்திக்கான் நாட்டிற்கான ஈரான் தூதுவர் பொறுப்பேற்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
வத்திக்கான் நாட்டிற்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதரகத் தலைவர் Mohammad Hossein Mokhtari அவர்கள் டிசம்பர் 22ஆம் தேதி திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்து தன் நியமனச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தார்.
1954ஆம் ஆண்டிலிருந்து, அதாவது திருத்தந்தை 12ஆம் பயஸ் அவர்களின் காலத்திலிருந்து வத்திக்கானுடன் முழு அரசியல் உறவைக் கொண்டிருக்கும் ஈரான் நாடு, அதன் புரட்சிக்காலத்திலும் இவ்வுறவைத் துண்டிக்காதது குறிப்பிடத்தக்கது.
இஸ்ராயேல்-பாலஸ்தீனியப் போர் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், கடந்த நவம்பர் மாதம் 5ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காசா பகுதி போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக ஈரான் அரசுத்தலைவர் Ebrahim Raisi அவர்களுடன் தொலைபேசியில் உரையாடியது நினைவுகூரத் தக்கது.
2016ஆம் ஆண்டு ஜனவரியில் ஈரான் அரசுத் தலைவர் Hassan Rouhani அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், 1999ல் ஈரான் அரசுத் தலைவர் Mohammad Khatami அவர்கள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களையும் திருப்பீடத்தில் சந்தித்த நிகழ்வுகள் மிக முக்கியத்துவம் நிறைந்தவை.
தற்போது, வத்திக்கான் நாட்டிற்கான ஈரான் தூதுவராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள, 58 வயதான Mohammad Hossein Mokhtari அவர்கள், இங்கிலாந்தின் Durham பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இதே டிசம்பர் 22ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, இரஷ்யா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கான திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் Giovanni d’Aniello அவர்களும் திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்