++ Il Papa prega per vittime attentato a messa Filippine ++

மரணம், அழிவு மற்றும் துன்பத்தைத் தரும் போர்

போரினால் அதிகமாகத் துன்புறும் காசா மக்கள் அடிப்படைத்தேவைகளுக்கானப் பற்றாகுறையுடன் வாழ்கின்றனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

இஸ்ரயேல் மற்றும் பாலஸ்தீனத்தில்  போர்நிறுத்தம் முடிவடைந்து மீண்டும் போர் மூண்டுள்ளதால், நிலைமை மிகவும் மோசமாகி வருவது வருத்தத்தை அளிக்கின்றது என்றும் மரணம், அழிவு மற்றும் துன்பத்தை தரும் இப்போர் காசாவில் உள்ள மக்களை அதிகமாகப் பாதிக்கின்றது என்றும்  கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரைக் கருத்துக்களை பேரருள்திரு பிரைதா அவர்கள் வழியாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிலவ வலியுறுத்தினார்.   

பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தாரோடு இணைந்தது ஒளியையும் நம்பிக்கையையும் அவர்கள் வாழ்வில் வழங்கியது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், போரினால் அதிகமாகத் துன்புறும் காசா மக்கள் அடிப்படைத்தேவைகளுக்கானப் பற்றாகுறையுடன் வாழ்கின்றனர் என்றும் எடுத்துரைத்தார்.   

போர் மற்றும் வன்முறைச் செயல்களுக்குக் காரணமானவர்கள் அனைவரும் கூடிய விரைவில் புதிய போர்நிறுத்த உடன்படிக்கைக்கு வரவேண்டும் என்றும், ஆயுதங்களுக்குப் பதிலாக வேறு தீர்வுகளைக் கண்டு அமைதிக்கான துணிவானப் பாதைகளைப் பின்பற்ற முயற்சிப்பார்கள் என்று  நம்புகின்றேன் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

மேலும், பிலிப்பீன்ஸில் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலியின்போது நடைபெற்ற குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன் செபங்களை உறுதியளிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதிக்கப்பட்ட அம்மக்களின் குடும்பத்தாரோடு தனது ஆன்மிக நெருக்கத்தையும், ஏற்கனவே மிகவும் பாதிக்கப்பட்ட மிண்டானாவோ மக்களுக்குத் தன் ஆறுதலையும் வெளிப்படுத்தினார்.

ஐக்கிய அரபு எமிரகத்தில் உள்ள துபாயில் நடைபெறும் கால நிலை மாற்றம் தொடர்பான COP 28 கூட்ட செயல்பாடுகளைத் தொலைவில் இருந்தாலும் மிகுந்த கவனத்துடன் பின்பற்றிவருவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், காலநிலை மாற்றத்திற்கு உறுதியான அரசியல் மாற்றங்களுடன் பதிலளிப்பதற்கான தனது வேண்டுகோளைப் புதுப்பிப்பதாகவும் கூறினார்.

தனிமனிதத்துவம், தேசியவாதம், கடந்தகால வடிவங்களின் கட்டுப்பாடுகள் போன்றவற்றிலிருந்து வெளியேறி, பொதுவான பார்வையுடன் தாமதமின்றி,உடனடியாக தேவையான உலகளாவிய சூழலியல் மாற்றத்திற்காக நம்மை அர்ப்பணிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இத்தகைய மாற்றுத்திறனாளிகளை வரவேற்றல், அவர்களை நம்முடன் ஒன்றிணைத்து சேர்த்துக் கொள்ளல் போன்றவை முழு சமூகமும் மனிதத்துடன் செயல்பட உதவுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

குடும்பம், பங்குத்தளம், பள்ளி, பணிபுரியும் இடம், விளையாட்டு என எல்லா இடங்களிலும் யாரையும் ஒதுக்காமல், ஒவ்வொருவரையும், அவர்களின் குணங்கள் மற்றும் திறன்களால் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

அண்மையில் அருளாளர்களாக உயர்த்தப்பட்ட உல்மா குடும்பத்தார் நினைவாக உரோமில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்ற போலந்து நாட்டவர்கள், இத்தாலியின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் திருவருகைக்கால பயணத்திற்கான வாழ்த்தையும் கூறி மகிழ்ந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2023, 13:56