போர் ஏற்படுத்தும் பாகுபாடு போர் ஏற்படுத்தும் பாகுபாடு   (AFP or licensors)

பாகுபாடுகளால் துயருறும் கிறிஸ்தவச் சமூகங்களுடன் உடனிருக்கின்றேன்

மக்கள் அமைதியை விரும்புவதால், நாம் அமைதிக்காக இறைவேண்டல் செய்வதுடன், அமைதிக்காக உழைப்போம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பல்வேறு சூழல்களில் பாகுபாடுகளை அனுபவிக்கும் கிறிஸ்தவ சமூகங்களுடன் தான் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், சிரியா, காசா மற்றும் உக்ரைனில் நிலையான அமைதிநிலவ இறைவேண்டல் செய்வதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 26, இச்செவ்வாயன்று, திருஅவையின், முதல் மறைச்சாட்சியான புனித ஸ்தேவான் விழாவில் வத்திகானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய சிறப்பு மூவேளை உரைக்குப் பின்பு இவ்வாறு கூறிய திருத்தந்தை, அனைவருக்கும் பணியாற்றுவதில் விடாமுயற்சியுடனும், நீதி மற்றும் மத சுதந்திரத்திற்காக அமைதியான முறையிலும் உழைத்திடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் அமைதியான வாழ்வைப் பெரும்பொருட்டு அவர்களை புனித ஸ்தேவானிடம் ஒப்படைப்பதாகவும், அவர் அவர்களுக்காக இறைவனிடம் பரிந்துரைப்பார் என்றும் உரைத்தார் திருத்தந்தை.

போர் எப்படிப்பட்ட சூழலை உருவாக்குகிறது என்பதை ஊடகங்கள் நமக்குக் காட்டுகின்றன என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  போரின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு நாம் சாட்சிகளாய் நிற்கின்றோம், இப்போது நாம் காசாவைப் பார்க்கிறோம் மற்றும் சிதைத்தழிக்கப்பட்ட உக்ரைனைப் பற்றி நாம் நினைவுகூர்கின்றோம் என்றும் எடுத்துக்காட்டினார்.

மேலும் மக்கள் அமைதியை விரும்புவதால், நாம் அமைதிக்காக இறைவேண்டல் செய்வோம் எனவும்,  அமைதிக்காக உழைப்போம் எனவும் அங்குக் குழுமியிருந்த திருப்பயணிகளிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 December 2023, 13:47