பெத்லகேமில் கிறிஸ்மஸ் குடில் தயாரிப்பு பெத்லகேமில் கிறிஸ்மஸ் குடில் தயாரிப்பு  (AFP or licensors)

புனித பூமியில் துன்புறுவோருடன் திருத்தந்தையின் ஒருமைப்பாடு

புனித பூமி கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின்போது, துன்புறும் மக்களுடன் இணைந்திருக்க திருத்தந்தையின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளார் கர்தினால் Krajewski.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

போரால் பாதிக்கப்பட்டு துன்புறும் மக்களுடன் தன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் நோக்கத்தில், திருத்தந்தையின் பிறரன்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski அவர்களை, புனித பூமிக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பூமி கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின்போது, துன்புறும் மக்களுடன் இணைந்திருக்க திருத்தந்தையின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கர்தினால் Krajewski அவர்கள், ஏற்கனவே பாதிக்கப்பட்ட பல பகுதிகளை திருத்தந்தையின் சார்பில் சென்று சந்தித்து திருத்தந்தையின் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துள்ளதுடன்,  உதவிகளையும் வழங்கியுள்ளார்.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தன் அண்மை நாடான உக்ரைனை ஆக்ரமித்த இரஷ்யா, அந்நாட்டிற்கு எதிரானத் தாக்குதல்களைத் துவக்கியதைத் தொடர்ந்து, உக்ரைன் நாட்டிற்கு பலமுறை திருத்தந்தையின் சார்பில் மனிதாபிமான உதவிகளை எடுத்துச் சென்று, துன்புறும் மக்களிடையே விநியோகித்துள்ளார் கர்தினால் Krajewski.

கர்தினால் Krajewski அவர்களைத் தலைவராகக் கொண்டுச் செயல்படும் திருத்தந்தையின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கான திருப்பீடத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தந்தை அவர்கள் தினமும் உலக அமைதிக்காகச் செபிப்பதாகவும், இவ்வுலகைக் கறைப்படுத்தும் போர்களான, உக்ரைன் போர், சிரியா மோதல், ஆப்ரிக்காவில் பல நாடுகளுக்குள் மோதல்கள், தற்போதைய இஸ்ராயேல்-பாலஸ்தீனிய போர் போன்றவைகள் முடிவுக்கு வந்து அமைதி நிலவ வேண்டும் என்ற ஆவலுடன் செபிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், போரால் துன்புறும் மக்களுடன் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கச் செல்லும் கர்தினால் அவர்களுக்கு ஒவ்வொருவரும் தங்கள் செபம் வழி உதவ வேண்டும் என திருத்தந்தை கேட்பதாகவும் அவ்வறிக்கைத் தெரிவிக்கிறது.

2014ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி, வத்திக்கான் தோட்டத்தில் இஸ்ராயேல் அரசுத்தலைவர் Shimon Peres அவர்களையும், பாலஸ்தீனிய அரசுத்தலைவர் Mahmoud Abbas அவர்களையும் திருத்தந்தை சந்தித்து உரையாடியதும், திருத்தந்தையின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கான திருப்பீடத் துறையின் அறிக்கையில் நினைவூட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2023, 15:50