Pragueயின் துப்பாக்கிச் சூடு குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
செக் குடியரசின் தலைநகர் Pragueயில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருடன் தன் ஆன்மீக நெருக்கத்தை வெளியிடுவதாக திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
செக் குடியரசில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூடு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கும் திருத்தந்தையின் செய்தி, இறந்தவர்களை இறைவனின் அன்புநிறை கருணையில் ஒப்படைப்பதாகவும் கூறுகிறது.
திருப்பீடச் செயலர், கர்தினால் பியேத்ரோ பரோலின் அவர்களால் அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் இரங்கல் செய்தியில், இந்த துப்பாக்கிச்சூட்டால் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் இழந்துத் தவிக்கும் மக்களுக்கு இதைத் தாங்கும் பலத்தையும், ஆறுதலையும் இறைவன் வழங்கவேண்டும் என செபிப்பதாகவும் திருத்தந்தையின் உறுதிப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 21, வியாழக்கிழமையன்று Pragueன் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 14 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரும் உயிரிழந்துள்ள நிலையில், அதே வியாழன் காலையில் இம்மாணவர் தன் தந்தையையும் கொன்ற பின்னர் இத்தாக்குதலை நடத்தியுள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்