குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தை இரங்கல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
பிலிப்பீன்ஸ் மிண்டானாவோவின் மராவி நகர் பகுதியில் திருப்பலியின் போது ஏற்பட்ட குண்டுவெடிப்பினால் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்க்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனது ஆறுதலையும் ஆன்மிக நெருக்கத்தையும் வெளிப்படுத்தி இரங்கல் தந்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை பிலிப்பீன்ஸின் மராவி நகரில் உள்ள தேசிய பல்கலைக் கழகத்தின் உடற்பயிற்சிக் கூடத்தில் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ISIS எனப்படும் இஸ்லாமிய இயக்கத்தார் நடத்திய குண்டுவெடிப்பினால் ஏறக்குறைய நான்கு பேர் உயிரிழந்தும் 42 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
திருத்தந்தையின் இரங்கல் தந்திச்செய்தியானது திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு மராவி பகுதியின் அருள்பணியாளர் பெருமதிப்பிற்குரிய edwin de la peña y angot அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள் என்ற திருவிவிலிய வரிகளை மேற்கோள்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியின் இளவரசராம் இயேசு, வன்முறையில் இருந்து மீண்டு வரவும், நன்மையால் தீமையை வெல்லவும் நமக்கு ஆற்றல் அளிப்பாராக என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் வல்ல இறைவனின் இரக்கத்தை இறந்தவர்கள் அனைவரும் பெறவும், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆறுதல் மற்றும் குணமளிக்கும் கொடைகளைப் பெற அவர்களுக்காக செபிப்பதாகவும் அத்தந்திச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்து பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், வன்முறையாளர்களால் நடத்தப்படும் அறிவற்ற கொடுமையான இச்செயலை தான் கடுமையாக் கண்டிப்பதாகவும், அப்பாவி மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்கள் எப்போதும் சமூகத்தின் எதிரிகளாகக் கருதப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்