திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை 24.12.23

மென்மையுடன் நம்மை மீட்க வரும் கடவுளின் பிரசன்னத்தை நோக்கி திறந்த உள்ளம் கொண்டவர்களாகவும் அவரை வரவேற்கும் உள்ளம் கொண்டவர்களாகவும் இருக்க மரியா நமக்கு உதவுவாராக.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அன்பான சகோதர சகோதரிகளே, இனிய ஞாயிறு, காலை வணக்கம்!

இன்று, திருவருகைக் காலத்தின் நான்காவது ஞாயிறு நற்செய்தி வாசகமானது கபிரியேல் தூதர் கன்னி மரியாவிற்கு காட்சியளித்ததைப் பற்றி எடுத்துரைக்கின்றது. வானதூதர் மரியாவுக்கு தோன்றி இயேசு எவ்வாறு கன்னி மரியாவின் வயிற்றில் கருவுருவார் என்பதை பற்றி விளக்கி தூய ஆவி உன்மேல் வருவார், உன்னதரின் வல்லமை உன்னை நிழலிடும்" என்று கூறுகின்றார். நிழலிடும் என்பதைக் குறித்து சற்று சிந்திப்போம்.

மரியா வாழ்ந்த நாடானது எப்போதும் வெயில் நிறைந்தது. அவ்விடத்தில் மேகம் கடந்து செல்லும், வறட்சியை எதிர்த்து நிற்கின்ற மரங்கள் தங்குமிடங்களையும், கூடாரங்கள் பாதுகாப்பையும் ஆறுதலையும் தரும். மீட்டெடுக்கும் ஒரு பரிசாக கடவுளின் செயலாக விளங்குகின்ற நிழலாக தூயஆவியானவர் மரியா மீது இறங்கும் விதத்தை துல்லியமாக விவரிக்கிறார் வான தூதர். கடவுள் எப்போதும் ஒரு மென்மையான அன்பாக நம்மில் செயல்படுகிறார். இதுவே கடவுளின் செயல் முறை.

பாதுகாக்கும் நிழல் என்பது விவிலியத்தில் மீண்டும் மீண்டும் அடையாளமாகக் குறிப்பிடப்படுகின்றது. பாலைவனத்தில் இஸ்ரயேல் மக்களுடன் கடவுள் நிழலாக வந்ததைப் பற்றி சிந்திப்போம். நிழல் கடவுளின் கருணையைப் பற்றி பேசுகிறது. அவர் மரியாவிடம் மட்டுமல்ல, இன்று நம் அனைவருக்கும் சொல்கின்றார். "நான் இங்கே உனக்காகவும், நான் உனது அடைக்கலமாகவும், தங்குமிடமாகவும் என்னையே வழங்குகிறேன்: என் நிழலின் கீழ் வா, என்னுடன் இரு என்கின்றார்." சகோதர சகோதரிகளே, கடவுளின் கனிவான அன்பு நம்மில் இப்படித்தான்  செயல்படுகின்றது. நமது நண்பர்கள், வாழ்க்கைத் துணைவர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நாம் மென்மையானவர்களாகவும், மரியாதைக்குரியவர்களாகவும் மற்றவர்களை இரக்கத்துடன் கவனித்துக்கொள்பவர்களாகவும் நாம் வாழ  இறைவனின் கருணை நிறை மனதால் நாம் அழைக்கப்படுகின்றோம். கடவுளின் கருணையை நினைத்துப் பார்ப்போம்!

கடவுள் நம்மை அன்பு செய்கின்றார் நாமும் பிறரை அன்பு செய்ய வரவேற்க, பாதுகாக்க மதிக்க நம்மை அழைக்கின்றார். எல்லோரையும் நினைத்துப் பார்ப்போம் குறிப்பாக, ஒதுக்கப்பட்டவர்களை, கிறிஸ்துமஸ் பெருவிழா மகிழ்ச்சியிலிருந்து வெகு தொலைவில் இருப்பவர்களைப் பற்றி சிந்திப்போம். கடவுளின் கருணை மனம் கொண்டு அனைவரையும் நினைப்போம். கடவுளின் கருணையை நினைவில் கொள்வோம்

கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு, பரிசுத்த ஆவியின் நிழலால், கடவுளின் இனிமை, சாந்தம், கருணையினால் என் இதயத்தில் அவருக்கு இடமளிக்கின்றேனா? நற்கருணையின் வழியாக அவரது மன்னிப்பை அணுகுகின்றேனா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்,  தனிமை மற்றும் தேவையுள்ள எந்த மக்களுக்கு நான் மீட்டெடுக்கும் நிழலாக, ஆறுதல் தரும் நட்பாக இருக்கின்றேன் என சிந்தித்துப் பார்ப்போம்.

மென்மையுடன் நம்மை மீட்க வரும் கடவுளின் பிரசன்னத்தை நோக்கி திறந்த உள்ளம் கொண்டவர்களாகவும் அவரை வரவேற்கும் உள்ளம் கொண்டவர்களாகவும் இருக்க மரியா நமக்கு உதவுவாராக.

இவ்வாறு தனது ஞாயிறு மூவேளை செப உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 December 2023, 12:40