அன்பு எவ்வித ஓசையும் எழுப்பாது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உங்கள் இல்லங்களிலும் குடும்பங்களிலும், ஒவ்வொரு நாளும் சிறிய காரியங்களுக்கு நன்றியுணர்வின் சிறிய சைகைகளை வெளிப்படுத்துங்கள் என்றும், இந்தப் பண்பை குழந்தை இயேசு, அன்னை மரியா மற்றும் யோசேப்பு வீற்றிருக்கும் குடிலிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்
டிசம்பர் 21, இவ்வியாழனன்று, வத்திக்கானின் பணியாளர்களை புனித ஆறாம் பவுலரங்கில் சந்தித்தபோது, அவர்களுக்கு வழங்கிய கிறிஸ்து பிறப்பு செய்தியில் இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, தன்னை முன்னிலைப்படுத்தாத மறைந்த வாழ்வு மற்றும் எளிமை குறித்து தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.
தம்முடைய மகத்துவத்தால் நம்மை அச்சுறுத்தவோ அல்லது தம்மை வலிந்து திணிக்கவோ நம்மிடம் வராமல், தன்னை நம்மில் ஒருவராக ஆக்கிக் கொண்டு, மிகவும் எளிமையான முறையில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் கடவுளின் சாந்தத்தை இந்த இரண்டு பண்புகளும் நமக்கு உணர்த்துகின்றன என்று கூறினார் திருத்தந்தை.
ஏழ்மையான நிலையில் வாழ்ந்த திருமணமான தம்பதியரான அன்னை மரியா மற்றும் யோசேப்பிடம், மாட்டுத் தொழுவத்தில் பிறந்த ஒரு குழந்தையின் எளிமையில் கடவுள் மறைந்துள்ளார் என்றும் இவையே இறைமைத்தனின் அடையாளங்கள் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
தொட்டிலில் பிறந்துள்ள இயேசு, சிறியவர்கள் மற்றும் கடையவர்களின் கடவுள் என்றும், அவருடன், நாம் அனைவரும் இறையாட்சியில் நுழைவதற்கான வழியைக் கற்றுக்கொள்கிறோம் என்றும், இந்த இறையாட்சி என்பது வெளிப்படையான மற்றும் செயற்கையான மதம் அல்ல, ஆனால் குழந்தைகளைப் போன்ற சிறியவர்களுக்கு உரியது என்றும் விளக்கினார் திருத்தந்தை.
வத்திக்கானில் உங்கள் பணி பெரும்பாலும் நாள்தோறும் மறைபொருளாகவே உள்ளது என்றும், பெரும்பாலும் முக்கியமற்றதாகத் தோன்றக்கூடிய காரியங்களைச் செய்து, அதற்குப் பதிலாக, திருஅவைக்கும் சமூகத்திற்கும் ஒரு பங்களிப்பை வழங்குகின்றீர்கள் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்