சிராகுஸா மரியன்னை திருத்தலம் சிராகுஸா மரியன்னை திருத்தலம் 

Syracuse அன்னைமரியா கண்ணீர் வடித்ததன் 70 ஆண்டு நிறைவு

பலவீனமான மக்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படும்போதும், போர்களும் வன்முறைகளும் அப்பாவி மக்களை பலிவாங்கும்போதும், அன்னை மரியா கண்ணீர் சிந்துகிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இத்தாலியின் சிசிலி தீவிலுள்ள Syracuse நகரில் அன்னைமரியாவின் திருவுருவப்படம் கண்ணீர் வடித்ததன் 70 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி அம்மறைமாவட்ட விசுவாசிகளுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனின் அன்னையும் நம் அன்னையுமாகிய அன்னை மரியாவின் திருவுருவம் 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கும் செப்டம்பர் முதல் தேதிக்கும் இடைப்பட்ட நாளில் கண்ணீர் வடித்து, இன்றளவில் காக்கப்படும் அக்கண்ணீர், நோயாளிகள், முதியோர் மற்றும் துன்புறுவோருக்கு ஆறுதல் அளித்துவருவதாக தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது அன்னையின் நெருங்கிய, மற்றும் இதயம் நிறை பிரசன்னத்தை எடுத்துரைப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

நம் பாவங்களை மன்னித்து நம்மை ஏற்றுக்கொள்ள காத்திருக்கும் கருணைநிறை இறைத்தந்தையின் அன்பில் பங்குபெறுவதை, இறையன்னையின் 70 ஆண்டுகளுக்கு முன்னர் சிராகுஸில் சிந்தப்பட்ட இந்த கண்ணீர் காட்டுகிறது என்கிறது திருத்தந்தையின் இத்திருத்தலத்திற்கான செய்தி.

இரண்டாம் உலகப்போரின் துன்பங்களுக்குப் பின்னர் தங்கள் முதல் குழந்தைக்காகக் காத்திருந்த Angelo Iannuso மற்றும் Antonina Giusto தம்பதியரின் வீட்டில், இந்த அன்னை மரியாவின் கண்ணீர் சிந்திய நிகழ்வு இடம்பெற்றது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றும் பலவீனமான மக்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படும்போதும், போர்களும் வன்முறைகளும் அப்பாவி மக்களை பலிவாங்கும்போதும், அன்னை மரியா கண்ணீர் சிந்துகிறார் என்றார்.

அமைதியின் அரசியும், ஆறுதலின் அன்னையுமான அன்னை மரியாவை நோக்கி அவரின் பரிந்துரைக்காக விண்ணப்பிப்போம் எனத் தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவை நோக்கிய செபம் ஒன்றையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2023, 15:46