திருத்தந்தையின் அமைதி முயற்சிகளுக்கு உக்ரைன் அரசு நன்றி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உக்ரைனில் அமைதி இடம்பெறுவதற்கு திருத்தந்நை எடுத்துவரும் முயற்சிகளுக்கும், அந்நாட்டின் அமைதிக்காக 80 நாடுகள் இணைந்து அமைதி திட்டம் ஒன்றை வகுத்துள்ளதற்கு வத்திக்கானின் ஆதரவிற்கும் உக்ரைன் அரசுத்தலைவர் தன் நன்றியை வெளியிட்டுள்ளார்.
திருத்தந்தையுடன் தான் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலில், 80 நாடுகளை உள்ளடக்கிய உக்ரைனின் அமைதி திட்டத்திற்கு திருத்தந்தையின் ஆதரவிற்கு நன்றியை வெளியிட்ட அரசுத்தலைவர் Volodymyr Zelensky அவர்கள், இது குறித்த விவரங்களை தன், அரசுத்தலைவருக்குரிய இணையப் பக்கத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் மக்களுக்கு கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தைக்கு தொலைபேசி வழியாக நன்றியை வெளியிட்ட வேளையில் அவரின் அமைதிக்கான முயற்சிகளுக்கும், அமைதித் திட்டத்திற்கான ஆதரவிற்கும் நன்றியை வெளியிட்டதாகவும் தெரிவித்தார் உக்ரைன் அரசுத்தலைவர்.
கடந்த ஆண்டு, அதாவது 2022 பிப்ரவரி 24ஆம் தேதி இரஷ்ய நாடு உக்ரைனை ஆக்கிரமிக்கத் துவங்கியதிலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் உக்ரைன் அர்சுத்தலைவர் Zelensky அவர்களும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதியும், அதே ஆண்டு மார்ச் 22, ஆகஸ்ட் 12 தேதிகளிலும் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாண்டு மே மாதம் 13ஆம் தேதி திருத்தந்தையை திருப்பீடத்தில் வந்து சந்தித்து உரையாடிய உக்ரைன் அரசுத்தலைவர், தற்போது திருத்தந்தையுடன் தொலைபேசி வழி உரையாடியுள்ளார்.
திருத்தந்தைக்கும் உக்ரைன் அரசுத் தலைவருக்கும் இடையேயான நேரடி முதல் சந்திப்பு 2020ஆம் ஆண்டு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்