உலகத்தின் நலன்களுக்காக நாம் அனைவரும் இணைந்து செயல்பட...
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஒன்றிணைந்து செயல்படுவதன் வழியாக ஒரு சிறந்த முன்மாதிரியை அமைக்க வேண்டியது அவசரமானது என்றும், தங்களின் சொந்த நலன், தனிப்பட்ட குழுவினருக்காக அல்ல, மாறாக அமைதி மற்றும் காலநிலையை மிக முக்கியமாகக் கருதும் நம் உலகத்தின் நலன்களுக்காக நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்றுவரும் காலநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தின் ஒருபகுதியாக “Faith Pavilion எனப்படும் நம்பிக்கையின் காட்சிக்கூடமானது திறக்கப்பட்டதையடுத்து காணொளிச்செய்தியின் வழியாக இவ்வாறு தனது வாழ்த்துக்களை எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
காலநிலை மாற்றம் தொடர்பான COP கூட்டத்திற்குள் நம்பிக்கைக்கான ஒரு பெவிலியனை உருவாக்கியதற்கு நன்றி என்று கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கான விருப்பத்தை இந்த பெவிலியன் நிரூபிக்கின்றது என்றும், இன்று உலகிற்கு தேவை யாருக்கும் எதிரான கூட்டணிகள் அல்ல, மாறாக அனைவருக்கும் தேவையான நன்மையளிக்கின்ற ஒரு செயலே முக்கியமாகத் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மதத்தின் பிரதிநிதிகளாக, மாற்றம் சாத்தியமானது என்பதை வெளிப்படுத்தவும், மாண்புள்ள மற்றும் நிலையான வாழ்க்கை முறைகளுக்கு சான்றுபகரும் வகையில் நமது பொதுவான இல்லமாகிய இப்பூமிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாடுகளின் தலைவர்களிடம் சத்தமாக எடுத்துரைப்போம் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
எளியவர்கள் மற்றும் ஏழைகளின் செபங்கள் உன்னத இறைவனின் அரியணையை அடையும் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகையோரின் எதிர்காலத்திற்காகவும் நம் அனைவரின் எதிர்காலத்திற்காகவும் படைப்பைப் பாதுகாப்போம் நமது பொதுவான வீட்டைப் பாதுகாப்போம் அமைதியாக வாழ்வோம், அமைதியை வளர்ப்போம் என்றும் கூறி தனது காணொளிச் செய்தியினை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்