திருஅவையிலுள்ள தனிவரங்களின் பன்முகைமை குறித்து மகிழ்வு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருஅவையில் காணப்படும் அருங்கொடைகள் அல்லது தனிவரங்களின் பன்முகைமை குறித்து நாம் அஞ்சத் தேவையில்லை, மாறாக, இத்தகைய பன்முகைமை குறித்து நாம் மகிழவேண்டும் என ஜனவரி மாதத்திற்கான ஜெபக்கருத்தில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பன்முகத்தன்மையும் ஒன்றிப்பும் துவக்க கால கிறிஸ்தவ சமூகங்களிலும் காணப்பட்ட ஒன்று எனக் கூறும் திருத்தந்தையின் ஜெபக்கருத்து, இதற்கிடையேயான பதட்ட நிலைகள் உயர்மட்ட அளவில் தீர்வுகாணப்பட வேண்டியவை எனவும் உரைக்கிறது.
விசுவாசப் பயணத்தில் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், ஏனைய கிறிஸ்தவ சபைகளுடனும், கிறிஸ்தவ சமூகங்களுடனும் கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல்களை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகிறது திருத்தந்தையின் ஜெபக்கருத்து.
பன்முகத்தன்மை என்பது குழப்பத்தையோ மன உறுத்தலையோ தரத் தேவையில்லை, மாறாக, அது கிறிஸ்துவின் உடலாக, ஒரே அங்கமாக வளரவேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ சமூகத்திற்கு கடவுள் வழங்கிய கொடையாகும் எனவும் திருத்தந்தையின் ஜனவரி செபக் கருத்து எடுத்துரைக்கின்றது.
உதாரணமாக, நாம் கீழைரீதி திருஅவைகளைக் குறித்து சிந்திப்போம். அவைகளுக்கு என்றே தனி வழிபாட்டு முறைகள் இருப்பினும், அவைகள் விசுவாசத்தின் ஒன்றிப்பை பேணிக் காத்து வருகின்றன, விசுவாச ஒன்றிப்பை அவைகள் பலப்படுத்துகின்றனவே ஒழிய, பிரிப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
நாம் தூய ஆவியாரால் வழி நடத்தப்படும்போது, பெருமிகுதியாக இருப்பவையும், பல்வேறு வகையானவையும், பன்முகத்தன்மையும் ஒருபோதும் முரண்பாடுகளைக் கொணர்வதில்லை எனக்கூறும் திருத்தந்தை, நாம் கடவுளின் அன்பில் வித்தியாசம் இல்லாதவர்களாகவும், அதேவேளை, ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்களாகவும் வாழும் கடவுளின் குழந்தைகள் என்பதை தூய ஆவியார் நமக்கு நினைவூட்டுகிறார் என மேலும் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ சமூகங்களுக்குள் காணப்படும் பல்வேறு வகையான தனிவரங்கள் என்னும் கொடையை அங்கீகரிக்கவும், கத்தோலிக்க திருஅவையில் காணப்படும் பல்வேறு வகையான வழிபாட்டு பாரம்பரியங்களின் வளமையை கண்டுகொள்ளவும் தூய ஆவியார் நமக்கு உதவுவாராக என செபிப்போம் என தன் ஜனவரி மாத செபக்கருத்தின் இறுதியில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்