ஜப்பான் நில நடுக்கம் குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஜப்பானில் இடம்பெற்ற நில அதிர்ச்சியால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள் குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த இரங்கலை வெளியிடும் தந்திச் செய்தி அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் அனுப்பப்பட்டுள்ள இந்த தந்திச் செய்தியில், இந்த நில அதிர்ச்சியால் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் திருத்தந்தை தன் ஆன்மீக நெருக்கத்தையும், இதயம்நிறை ஒருமைப்பாட்டையும் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தோருக்காகச் செபிப்பதாகவும், இழப்புக்களை சந்தித்துள்ளோருக்கு இறைவனின் ஆறுதலையும் பலத்தையும் வேண்டுவதாகவும் திருத்தந்தை அச்செய்தியில் உறுதி கூறியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டோரிடையே பணியாற்றிவரும் அரசு அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் தன் ஊக்கத்தை வழங்குவதாகவும், இறையாசீருக்காக இறைஞ்சுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று பிற்பகலில் இடம்பெற்ற 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்