கடவுளின் பிள்ளைகள் நாம் என்பதை அடையாளப்படுத்தும் திருமுழுக்கு
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருமுழுக்கு அருளடையாளத்தில் கடவுள் நமக்குள் வந்து நம்மை தூய்மைப்படுத்துகின்றார் நமது இதயத்தைக் குணப்படுத்துகின்றார் என்றும், நாம் அனைவரும் அவருடைய குழந்தைகளாக அவருடைய மக்களாக வாழ வழிகாட்டுகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 7 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய 12000 திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்கு பெற்ற பகுதியைக் குறித்து விளக்கமளித்தார்.
திருமுழுக்கு அருளடையாளம் வழியாக கடவுள் நம்முடன் மிக நெருக்கமாகி விட்டார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் திருமுழுக்கு என்பது மறுபிறப்பு, கடவுளின் அருளை நாம் பெற்றுக்கொண்ட நாள், எனவே அந்த நாளை நாம் கட்டாயம் நம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
திருமுழுக்கு அருளடையாளத்திற்காக நாம் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நமது பெற்றோர்கள், ஞானப்பெற்றோர்கள், திருமுழுக்கு அருளடையாளம் வழங்கிய அருள்பணியாளர் என அனைவருக்கும் நமது நன்றியினைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
திருமுழுக்கு அருளடையாளம் கொண்டு வரும் கடவுளின் அளப்பரிய பரிசினை நான் உணர்ந்திருக்கின்றேனா? கடவுளின் அன்பு மகனாக மகளாக என்னை உணரவைக்கும் கடவுளின் ஒளியை நான் ஏற்கின்றேனா? என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், சிலுவை அடையாளம், நாம் கடவுளின் பிள்ளைகள், அவர் நம்முடன் இருக்கின்றார் என்பதை அடையாளப்படுத்துகின்றது என்றும் கூறினார்.
வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் ஒன்றாக இணைந்து சிலுவை அடையாளம் வரையக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்கு அருளடையாளம் பெற்ற நாளை மறக்கக்கூடாது ஏனெனில் அது நமது பிறந்த நாள் போன்று சிறப்பிக்கத்தக்கது என்றும் கூறினார்.
இறுதியாக, தூய ஆவியின் ஆலயமான அன்னை மரியா, கடவுள் நமது வாழ்வில் நிகழ்த்தும் அனைத்து அற்புதங்களையும் செயல்களையும் நாம் கொண்டாடவும் வரவேற்கவும் நமக்கு உதவுவாராக என்று கூறி, கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்