திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

தகவல்தொடர்பு திருஅவைக்கு மிகவும் அவசியமானது!

திருஅவை ஒரு பணித்தளம் ஆகும், மேலும் கத்தோலிக்கத் தொடர்பாளர்கள் தகவல்தொடர்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் தவறிழைக்க முடியாது மற்றும் அவர்கள் தெரிவிக்கும் செய்தியைப் பொறுத்தவரை ' இது நடுநிலையானது' என்று கூறலாம் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"நாம் யாவரும் ஓருடலில் உறுப்புகளாய் இருக்கிறோம்" (காண்க எபே 4:25) என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகள், எப்போதும் விரிவடையும் உறவுகளின் வலையமைப்பிற்குள் ஒற்றுமையாக வாழ்வதற்குத் தகவல்தொடர்பு மிகவும் அவசியம் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 4, இவ்வியாழனன்று, ஜெர்மனியின் கத்தோலிக்க வெளியீட்டாளர்கள் சங்கம் நிறுவப்பட்டதன் 75-ஆம் ஆண்டை முன்னிட்டு, அதன் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்த வேளை, இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, தகவல்தொடர்பு என்பது திருஅவையில் மிகவும் இன்றியமையாதது என்றும் கூறினார்.

உங்களின் வெளியீட்டாளர் சங்கம், கிறித்தவ ஒன்றிப்பு, மதங்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் அமைதி, சுதந்திரம் மற்றும் மனித மாண்பைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது என்றும், இந்த நோக்கங்கள் எப்போதும் போலவே பொருத்தமானவையாக இருக்கின்றன என்றும் அவர்களைப் பாராட்டிய திருத்தந்தை, ஆனால், இன்று எத்தனை மோதல்கள், உரையாடல்கள் வழியாகத் தீர்க்கப்படுவதற்குப் பதிலாக, ஊடகங்களில் தவறான செய்திகள் அல்லது ஆத்திரமூட்டுகிற அறிக்கைகளால் தூண்டப்படுகின்றன! என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

அதனால்தான், உங்கள் கிறிஸ்தவ பாரம்பரியம் மற்றும் அன்றாட நம்பிக்கையில் வலுவாக உள்ள நீங்கள், அமைதி மற்றும் புரிதலுக்கான் வழிகளை வளர்ப்பது, உறவு பாலங்களை உருவாக்குவது, செவிசாய்ப்பதற்குத் தயாராக இருப்பது, மற்றவர்களிடம் மரியாதையுடன் தொடர்புகொள்வது ஆகியவை அடிப்படையானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.  

மேலும், நாம் வாழும் இச்சமுதாயத்தில் இதற்கான அவசரத் தேவை உள்ளது என்றும், ஆனால் அதேவேளையில், திருஅவைக்கு மென்மையான மற்றும் முன்னுணர்ந்துரைக்கிற தகவல்தொடர்பு தேவை என்பதையும் அவர்களிடம் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

எவ்வாறாயினும், ஓர் உள்முக அணுகுமுறையைக் கொண்டிருக்காமல், இன்று இருக்கும் வழிமுறைகள் மற்றும் சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்தி, வாழ்வின் ஒவ்வொரு பகுதிக்கும் கிறிஸ்தவ செய்தியைக் கொண்டுவர வெளியே செல்ல வேண்டியது அவசியம் என்பதையும் அவர்களிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை.

திருஅவை என்பது ஒரு பணித்தளம் என்று உரைத்த திருத்தந்தை, கத்தோலிக்கத் தொடர்பாளர்கள் தகவல்தொடர்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் தவறிழைக்க முடியாது மற்றும் அவர்கள் தெரிவிக்கும் செய்தியைப் பொறுத்தவரை ' இது நடுநிலையானது' என்று கூறலாம் என்றும் விளக்கினார் திருத்தந்தை.

குழந்தையின் வறுமை கவனிக்கத்தக்கதொரு நிகழ்வு என்றும், தங்கள் கட்டணத்தை எப்படிச் செலுத்துவது என்றும் அறியாமல் இருக்கும் குடும்பங்கள் மற்றும் பல புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோரின் நிலைமையைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர்களிடம் உரைத்த திருத்தந்தை, இம்மக்களை ஜெர்மனி பெரிய அளவில் வரவேற்றுள்ளது என்றும் எடுத்துக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2024, 15:51