நிகரகுவா திருஅவை நிகரகுவா திருஅவை  (AFP or licensors)

நிகரகுவா திருஅவையின் துன்பங்கள் குறித்து ஆழ்ந்த கவலை

அண்மை நாட்களில் நிகரகுவா நாட்டில் குறைந்தபட்சம் 14 அருள்பணியாளர்கள், ஓர் ஆயர் மற்றும் இரு அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள் அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுவரும் நிக்கரகுவா நாட்டில் இடம்பெறுபவைகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆண்டின் முதல் நாளான, ஜனவரி முதல்தேதி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில், நிகரகுவா திருஅவை அனுபவித்துவரும் துன்பங்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.

இலத்தீன் அமெரிக்க நாட்டிலுள்ள முழு திருஅவைக்கும், அதன் அங்கத்தினர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குமான செபத்துடன் அவர்களுடன் தான் நெருக்கமாக இருப்பதாக தெரிவித்த திருத்தந்தை, நிகரகுவா நாட்டிற்காக அனைவரும் செபிக்குமாறும் அழைப்புவிடுத்தார்.

துன்ப துயர்களை, இடர்பாடுகளை வெற்றிகொள்ள உரையாடலின் பாதையை நாம் மேற்கொள்ளவேண்டும் என தான் ஆவல்கொள்வதாக உரைத்த திருத்தந்தை, இன்று இந்நேரத்தில் நிகரகுவா நாட்டிற்காக செபிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

கடந்த இரு வாரங்களில் மட்டும் நிகரகுவா நாட்டில் குறைந்தபட்சம் 14 அருள்பணியாளர்கள், ஓர் ஆயர் மற்றும் இரு அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள் அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2023ஆம் ஆண்டு துவக்கத்தில் சதியாலோசனை, பொய்யான செய்திகளை பரப்புதல், நீதித்துறைக்கு இடையூறு விளைவித்தல், அரசு அதிகாரிகளை அவமதித்தல் போன்ற குற்றங்களுக்காக 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கும் Matagalpa ஆயர் Rolando José Álvarez Lagosக்காக பொதுவில் செபித்ததற்காக கடந்த மாதம், அதாவது டிசம்பர் 20ஆம் தேதி கைதுச் செய்யப்பட்டுள்ளார் ஆயர் Isidoro del Carmen Mora Ortega.

இதற்கிடையே, அருள்பணியாளர்களை நிகரகுவா அரசு தொடர்ந்து கைது செய்து வருவதால், பங்குதளங்களை வழிநடத்தும் அருள்பணியாளர்கள் இன்றி வாடும் விசுவாசிகளுடன் தன் ஜெப நெருக்கத்தை வெளியிட்டுள்ளார் மனகுவா பேராயர் கர்தினால் Leopoldo José Brenes Solórzano.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 January 2024, 15:29