நன்றியுணர்வு மற்றும் நம்பிக்கையின் அடையாளம் அன்னை மரியா!

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு பணியிலும் இயேசுவின் பக்கம் திரும்பியபடி வாழ அன்னை மரியாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்வோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருஅவை கன்னி மரியாவிடமிருந்து நன்றியுணர்வையும் நம்பிக்கையையும் கற்றுக்கொள்கிறது என்றும், அவர் எப்போதும் அன்பாலும் அருளாலும் நிறைந்திருந்தார்  என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 31, இஞ்ஞாயிறு மாலை, 2023-ஆம் ஆண்டில் இறைவன் வழங்கிய அனைத்து நன்மைகளுக்கும் நன்றி கூறும் விதமாக, Te Deum என்ற திருவழிபாட்டில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரியா எப்போதும் அன்பினாலும், அருளினாலும், உண்மையினாலும் மற்றும் நம்பிக்கையினாலும் நிரப்பப்பட்டிருக்கிறார் என்றும் உரைத்தார்.

நாம் கொண்டிருக்கும் இறைநம்பிக்கை, இந்த மணிநேரத்தை உலக மனப்பான்மையிலிருந்து வேறுபட்ட வழியில் வாழ அனுமதிக்கிறது என்றும், மனுவுருவெடுத்தலின் வழியாகக் கன்னி மரியாவிடம் பிறந்த இயேசு கிறிஸ்துவின் மீதான நமது நம்பிக்கை, நேரத்தையும் வாழ்க்கையையும் உணர ஒரு புதிய வழியை அளிக்கிறது என்றும் கூறிய திருத்தந்தை, இதனை நன்றியுணர்வு, நம்பிக்கை ஆகிய இரண்டு வார்த்தைகளில் சுருக்கமாக எடுத்துரைக்க விரும்புவதாகக் கூறினார்.

நன்றியுணர்வு

புதிதாகப் பிறந்த இயேசுவை கண்ணுற்ற அன்னை மரியாவின் இதயத்தில், எவ்விதமான நன்றியுணர்வு இருந்திருக்கும் எனச் சிந்திப்போம் என்று கூறிய திருத்தந்தை, இந்நன்றியுணர்வு என்பது, ஒரு தாயால் மட்டுமே பெறக்கூடிய ஒரு அனுபவம் என்றும், ஆனால் கடவுளின் தாயான அவரில் அது ஒரு தனித்துவமான, ஒப்பிட முடியாத ஆழத்தைக் கொண்டுள்ளது என்றும் எடுத்துரைத்தார்.

திருஅவை கன்னி மரியாவிடமிருந்து நன்றியுணர்வையும் நம்பிக்கையையும் கற்றுக்கொள்கிறது என்று உரைத்த திருத்தந்தை, கடவுள் நாசரேத்தின் மரியாவைத் தேர்ந்தெடுத்தார். ஏனென்றால், அவருடைய இதயத்தில் தனது சொந்த நம்பிக்கை எதிரொலிப்பதைக் கடவுள் கண்டார் என்றும், இதனை தனது ஆவியின் வழியாக அவரே மரியாளுக்குள் உட்புகுத்தினார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்பிக்கை

அன்னை மரியா மற்றும் திருஅவையின் நம்பிக்கை என்பது, வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, மாறாக, அது வேறு ஒன்று, அதாவது, தான் தந்த வாக்குறுதிகளுக்கு உண்மையுள்ளவராக இருக்கும் கடவுளில் கொள்ளும் நம்பிக்கை (காண்க லூக் 1:55) என்றும், இந்த விசுவாசம் காலத்தின் பரிமாணத்தில் நம்பிக்கையின் வடிவத்தை எடுக்கும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இதற்கொரு எடுத்துக்காட்டாக 2025-ஆம் ஆண்டு உரோமையில் நடைபெறவிருக்கும் யூபிலி விழாவிற்கானத் தயாரிப்பாக நடைபெற்று வரும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பணிகளைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நம்பிக்கை என்பது வெறும் செயல்களை மட்டுமே சார்ந்ததன்று, மாறாக, இது திருஅவைக்கும், நாம் வாழும் சமூகத்திற்கும் வெளிப்படுத்த வேண்டிய சான்று வாழ்வைச் சார்ந்தது என்றும், இது நிகழ்வுகளை விட, வாழ்க்கையின் பாணியில், அறநெறி மற்றும் ஆன்மிகத் தரத்தில் ஒன்றித்து வாழ்வது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2024, 14:26