பணிவும், தாராள மனமும் உண்மையான கலைஞரின் இரண்டு நற்பண்புகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கலை வழியாக மகிழ்ச்சியைக் கொடுங்கள், அமைதியைப் பரப்புங்கள், நல்லிணக்கத்தை விதைத்திடுங்கள், ஏனென்றால், நம் அனைவருக்கும் இது மிகவும் தேவை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி 19, இவ்வியாழனன்று, Arena di Verona என்ற கலாச்சாரப் பண்பாட்டு அமைப்பு புதுப்பிக்கப்பட்டதன் நூறாவது ஆண்டை முன்னிட்டு அதன் குழுவினர் 300 பேரை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, அவர்கள் தங்களின் பணிகளைத் தொடர்ந்து அன்புடனும் ஆர்வமுடனும் அர்ப்பணிப்புடனும் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
கடந்த காலத்தின் மதிப்புமிக்க பாரம்பரியத்தை சேகரித்து உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கும் மிகச்சிறந்த நூறு ஆண்டுகால கலை செயல்பாடுகள், எதிர்கால சந்ததியினருக்கு அதை இன்னும் வளமானதாகக் கொடுக்கின்றன என்று உரைத்த திருத்தந்தை, இது மிகவும் அழகாக இருக்கிறது: இது ஒரு அறிவார்ந்த, ஆக்கபூர்வமான மற்றும் உறுதியான நன்றியுணர்வு மற்றும் சேவை என்றும் உரைத்தார்.
நாம் பேசும் மரபு பன்முகத்தன்மை கொண்டது என்றும், Arena அரங்கின் கட்டிடமே இருபது நூற்றாண்டுகளின் வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், அது எப்போதும் வாழும் இடமாக இருப்பதால் காலப்போக்கில் துல்லியமாகப் பாதுகாக்கப்படுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்தக் கட்டமைப்புகளைக் கட்டியெழுப்பியவர்களிடமிருந்து மற்றும் புனரமைத்தவர்களிடமிருந்து, ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் வரை, பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் திரைக்குப் பின்னால் வேலை செய்தவர்கள் என அத்தனை பேரிலும் எவ்வளவு உழைப்பு, எவ்வளவு அர்ப்பணிப்பு மற்றும் எவ்வளவு முயற்சி என்று கூறி வியந்தார் திருத்தந்தை.
இதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும்போது, பல உறுப்புகளைக் கொண்ட ஓர் உடலுடன் ஒப்பிடும் போது, திருஅவையைப் பற்றி புனித பவுலடியார் கூறுவது (காண்க.1 கொரி12:1-27) என் நினைவுக்கு வருகிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, உடலின் ஒவ்வொரு பகுதியும் அதன் குறிப்பிட்ட செயல்பாட்டில் மற்றவற்றுடன் இணைந்து நிற்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.
நூறு ஆண்டுகால கலை, உண்மையில், ஒருவரால் மட்டும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறிய குழுவால் கூட உருவாக்க முடியாது, மாறாக, அதற்கு ஒரு பெரிய சமூகத்தின் பங்களிப்பு தேவைப்படுகிறது என்று உரைத்த திருத்தந்தை, இதனை உருவாக்கியவர்கள் தங்களுக்காக மட்டுமல்லாது, பின்வரும் எதிர்கால சந்ததியினருக்காகவும் உருவாக்கியிருக்கிறார்கள் என்றும் விவிரித்தார்.
நீங்கள் பெரும் கூட்டமாக வந்திருக்கீறீரகள், ஒரு கூட்டம் என்பது எப்போதும் மேடையில் கூட, ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், கலையிலும், வாழ்க்கையைப் போலவே, பணிவாகவும் தாராளமாகவும் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என்று தெரிவித்த திருத்தந்தை, பணிவும் தாராள மனமும் உண்மையான கலைஞரின் இரண்டு நற்பண்புகள் என்பதை உங்களின் வரலாறு சொல்கிறது என்றும் எடுத்துக்காட்டினார்.
தனிப்பட்ட வெற்றிக்காக அல்ல, மற்றவர்களுக்கு அழகான ஒன்றைக் கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சிக்காகவும் இந்தப் பணியை அன்புடன் தொடர உங்களை ஊக்குவிக்கிறேன் என்று கூறிய திருத்தந்தை, கலை வழியாக மகிழ்ச்சியைக் கொடுங்கள், அமைதியைப் பரப்புங்கள், நல்லிணக்கத்தை விதையுங்கள், ஏனென்றால், நம் அனைவருக்கும் இது மிகவும் தேவை என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்