அமைதியை வலியுறுத்துவதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை
மெரினா ராஜ் – வத்திக்கான்
போர் நிறுத்தத்திற்கான வேண்டுகோளை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதில் தான் ஒருபோதும் சோர்வடைவதில்லை என்றும், பொதுமக்களை துன்பத்திற்கு ஆளாக்கி, ஆயுத விற்பனையாளர்களுக்கு மட்டும் இலாபத்தை அளிக்கும் போர், எப்போதும் தோல்விதான் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 29 திங்கள்கிழமை லா ஸ்தாம்பா என்னும் இத்தாலிய பத்திரிக்கைக்கு அளித்துள்ள நேர்காணலில் இவ்வாறு எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்காப்பிற்காக போர் செய்கின்றோம் என்று போரை ஒருபோதும் நியாயப்படுத்தக்க்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரயேல், பாலஸ்தீனம் போர் விரிவடைந்து கொண்டிருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓஸ்லோ ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையில் நிலவும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கொண்டுள்ளது என்றும் அது நடைமுறைப்படுத்தப்படாவிடில் அமைதி என்பது வெகுதொலைவில் உள்ள ஒன்றாக அமைந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.
அதிகரித்து வரும் இராணுவ பயன்பாடு அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், உலகில் பதட்டத்தையும் வன்முறையையும் அதிகரிக்கும் இவ்வேளையில் போர் நிறுத்தத்திற்கான செயல்பாடுகள் நம்பிக்கையை வளர்க்கும் நல்ல முடிவாக இருக்கும் என்று கருதுவதாகவும் கூறியுள்ளார்.
உக்ரைன் இரஷ்யா நாடுகளுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் மத்தேயோ ஷூப்பி அவர்களிடம் பணியை ஒப்படைத்துள்ளதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பாலஸ்தீன் மற்றும் இஸ்ரயேல் பிரச்சனை குறித்து எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா அவர்களுடன் காணொளி வாயிலாக தொடர்ந்து பேசிவருவதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
உரையாடல், ஒற்றுமை மற்றும் மனித உடன்பிறந்த உணர்வின் ஆற்றலுக்கான தேடல் போன்றவை உலக அமைதியைக் கட்டியெழுப்ப உதவும் தூண்கள் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், அமைதிக்கான செபம் என்பது மிக உறுதியானது, வலுவானது இறைவனின் இதயக் கதவுகளை தட்டும் வலிமை மிக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனவரி 31 அன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட உள்ள தூய தொன்போஸ்கோ விழா பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், எதிர்காலத்தை இழந்த இளையோர்க்கு நல்வழிகாட்டி அவர்கள் ஒன்றாக இணைந்து செபிக்கவும் விளையாடவும் மகிழவும் ஆன்மிக பலன்களைப் பெறவும் வழிவகுத்தவர் என்றும் இளையோர் மீதான சமூக அணுகுமுறையை மாற்றி அவர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுத்தவர் என்றும் கூறியுள்ளார்.
உலகளாவிய திருஅவை என்னும் பங்கின் பங்குத்தந்தையாக அருள்பணியாளராக தன்னை உணர்வதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், எப்போதும் கடவுளைக் கண்டறியும் இடமான மக்கள் மத்தியில் இருக்க விரும்புவதாகவும் எடுத்துரைத்தார்.
மேலும் தனிமை, அவரது உடல் நிலை, குழந்தைகளின் எதிர்காலம், புனிதராக அறிவிக்கப்பட உள்ள Mama Antula, அர்ஜெண்டினாவின் புதிய அரசுத்தலைவர், 2024ஆம் ஆண்டில் மேற்கொள்ள இருக்கும் பயணங்கள் போன்றவற்றைப் பற்றியும் பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்