திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில்  (ANSA)

இணைப்பின் பாலங்களை உருவாக்கும் தகவல் தொடர்புப்பணியாளர்கள்

பிளவுகள் மற்றும் முரண்பாடுகளை எதிர்க்கும் தூதர்களாக செயல்பட தகவல் தொடர்பாளர்கள் அழைக்கப்படுகின்றார்கள். - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

தகவல் தொடர்புப்பணியாளர் என்பவர் இணைப்பின் பாலங்களைக் கட்டுபவர் என்றும், தான் என்பதை விடுத்து, அடுத்தவருக்கு இடமளித்து, முன்தீர்மானங்களிலிருந்து விடுபட்டு, வேறுபாடுகள் என்னும் சங்கிலியிருந்து தன்னை விடுவித்து, உண்மையை எடுத்துரைப்பவர்களாக வாழ அழைக்கப்படுகின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

சனவரி 29 திங்கள்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் TV 2000 என்னும் இத்தாலிய தொலைக்காட்சி மற்றும் Radio in Blu என்னும் வானொலியின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஏறக்குறைய 1000 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அருகிருப்பு என்பது கடவுளின் குணங்களுள் ஒன்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், மற்றவர்களின் அருகே இருத்தல், கடவுள் மென்மையானவர் என்பதை எடுத்துரைத்தல், இரக்கத்துடன் பிறரை மன்னித்தல் என்னும் மூன்று பண்புகள் மிக முக்கியமானவை என்றும் வலியுறுத்தினார்.

வலைப்பின்னல்களை உருவாக்குதல், அன்பின் பிணைப்புக்களை ஏற்படுத்துதல், சமூகத்தின் அழகையும் நன்மையையும் பிறருக்கு எடுத்துரைத்தல் போன்றவற்றை செய்ய வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அதிகார வலைக்குள் வீழாதிருத்தல் போலிச்செய்திகளை உருவாக்காதிருத்தல் போன்றவற்றில் தகவல் தொடர்பாளர்கள் கவனமுடன் செயல்பட வலியுறுத்தினார்.      

விளிம்புநிலையில் இருப்பவர்கள், ஏழைகள், தனிமையில் இருப்பவர்கள், மற்றும்  கைவிடப்பட்ட மக்களை ஒருபோதும் மறந்துவிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தகவல் தொடர்பு என்பது இதயத்தின் ஞானமாக செயல்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மரியாதை மற்றும் திறமையுடன், பிளவுகள் மற்றும் முரண்பாடுகளை எதிர்க்கும் தூதர்களாக செயல்பட தகவல் தொடர்பாளர்கள் அழைக்கப்படுகின்றார்கள் என்றும், ஒவ்வொரு செய்தி, கட்டுரை மற்றும் தலையங்கத்தின் மையத்திலும் ஒரு நபர் இருக்கின்றார் என்பதை மறந்து விடக்கூடாது அதுவே தகவல் தொடர்பிற்கு முக்கியத்துவத்தை தருகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 January 2024, 13:23